சீனா-வில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை இன்று முதல் 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தியுள்ளார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுத்துள்ள சீனா, அமெரிக்காவில் இருந்து சீனாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 முதல் 15 சதவீதம் வரி உயர்வை அறிவித்துள்ளது.

சீனாவின் இந்த அறிவிப்பு ஒரு முழுமையான வர்த்தகப் போரை துவங்கியிருப்பதாகக் கருதப்படும் அதேவேளையில் சீனா, உக்ரைன், கனடா போன்ற நாடுகளுடன் அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை வேறு சில நாடுகள் மிக்ஸர் சுவைத்துக்கொண்டு வேடிக்கை பார்த்து வருகின்றன.
அமெரிக்க விவசாய மற்றும் உணவுப் பொருட்களுக்கு வரி உயர்வு அறிவிக்கப்பட்டதை அடுத்து உலகின் இரண்டு முன்னணி பொருளாதார நாடுகள் இடையே வர்த்தக மோதல் ஏற்பட்டுள்ளது.
சீனாவை சமாளிக்க உக்ரைனின் கனிம வளங்கள் மீது ஆதிக்கம் செலுத்த அமெரிக்கா முயற்சி செய்த நிலையில் டிரம்பின் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
அதேவேளையில், நட்பு நாடாக இருந்த உக்ரைனுடன் மோதல் போக்கை உருவாக்கி உள்ள டிரம்ப் சீனா மீதும் வரியை உயர்த்தியிருப்பது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் உள்நாட்டில் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படும் நிலையில் இந்த சிக்கலான சூழலை அமெரிக்கர்கள் எப்படி கையாளப்போகிறார்கள் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.