சென்னை: நீட் தேர்வு காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதனால், அந்த நீட் ரகசியத்தை #Daddy_son உடனடியாக சொல்ல வேண்டும், அப்படி இல்லை என்றால், திமுக பொய்தான் சொன்னது என்ற உண்மையை ஒப்புகொண்டு, இனியாவது எந்த நீட் மரணமும் நிகழாவண்ணம் தடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன் என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தாராபுரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களது மகன் கோகுலகிருஷ்ணன். மகள்கள் ஜனனி மற்றும் இந்துமதி(19). இதில் கோகுலகிருஷ்ணன் எம்எஸ்சி படித்துவிட்டு, விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். மகள் ஜனனி பிஎஸ்சி விவசாயம் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்துமதி கடந்த 2022ல் அரசு மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 520 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார்.

இவர், மருத்துவர்  ஆகும் கனவுடன் புதுச்சேரியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். அதில் 350 மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வீட்டிலிருந்தே நீட் தேர்வு பயிற்சி மேற்கொண்டு வந்தார். நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

 வேலைக்கு சென்றிருந்த பெற்றோர் மாலையில் வீடு திரும்பி வந்து பார்த்தபோது இந்துமதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்து வெள்ளிமேடுபேட்டை காவல்துறையினர் இரவு 11 மணி அளவில் மாணவியின் வீட்டுக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாணவியின் உயிரிழப்பு தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மாணவியின் தந்தை ராமதாஸ் கூறுகையில், ‘நீட் தேர்வின் மீதான பயத்தின் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்,’ என கூறியபடி கதறி அழுதார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக இந்துமதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நேற்று தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூட தி.மு.க.வின் நீட் ரகசிய அரசியல் நாடகம் குறித்து நான் பேசிய நிலையில், நாமும் மருத்துவர் ஆகிவிடலாம் என்கிற உயரிய லட்சியத்தோடு அல்லும் பகலும் படித்து வரும் மாணவர்கள் மத்தியில், ஆட்சிப்பொறுப்பேற்று 4ஆண்டுகள் ஆகியும் இன்று வரை அவர்களுக்கு விடியா தி.மு.க. அந்த நீட் ரகசியத்தை சொல்லாமல், ரகசியம் இருப்பதாக பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை குழப்பத்திலேயே வைத்திருக்கும் இந்த ஸ்டாலின் மாடல் அரசுதான் மாணவியின் மரணத்திற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும்.

அந்த நீட் ரகசியத்தை டாடி மகன் #Daddy_son (மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்)  உடனடியாக சொல்ல வேண்டும், அப்படி இல்லை என்றால், தி.மு.க. பொய்தான் சொன்னது என்ற உண்மையை ஒப்புகொண்டு, இனியாவது எந்த நீட் மரணமும் நிகழாவண்ணம் தடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.