தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் நாளை மார்ச் 4ம் தேதி முதல் தாம்பரம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்துகள் தற்போது கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தை அடைவதற்கு வண்டலூர், பெருங்களத்தூர் மற்றும் தாம்பரம் வரை சென்று பயணிகளை இறக்கி விட்டு பின்னர் கிளம்பாக்கம் பேருந்து நிலையம் வந்தடைகிறது.

இதனால் தாம்பரம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதையடுத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இனி தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் வண்டலூர் மேம்பாலத்தின் கீழ் ‘U’ எடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியதை அடுத்து அனைத்து கோட்ட போக்குவரத்து மேலாளர்களுக்கும் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த நடைமுறை நாளை முதல் செயல்படுத்தப்பட உள்ள நிலையில், இது பேருந்தில் இருந்து இறங்கி மின்சார ரயிலுக்கு செல்லும் பயணிகளுக்கு மிகவும் சிரமமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் அது வரும் ஜூன் மாதம் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தவிர, இம்மாத இறுதியில் கோடை விடுமுறை துவங்குவதை அடுத்து விடுமுறைக்காக வெளியூர் சென்று வரும் பயணிகளுக்கும் இது சிரமமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறக்கப்படும் வரை அனைத்து பேருந்துகளையும் தாம்பரம் வரை இயக்கவோ அல்லது மாற்று ஏற்பாடாக அனைத்து பேருந்துகளும் பொத்தேரி ரயில் நிலையத்தில் கட்டாயம் நின்று செல்லும் வகையிலோ ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.