முதலீட்டாளர்களுக்கு 35 வருட பழமையான விசாவை மாற்றும் வகையில், $5 மில்லியனுக்கு (ரூ. 43.5 கோடி) குடியுரிமை பெற வகை செய்யக் கூடிய “தங்க அட்டை” விசாவை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று தெரிவித்தார்.
இதனால், “செல்வந்தர்களாக இருப்பவர்கள் நிறைய பணம் செலவழித்து அமெரிக்காவில் முதலீடு செய்து வெற்றி பெற வழிகிடைக்கும், அதனால், நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படும், நிறைய வரிகளை வருவாய் கிடைக்கும். மேலும் இது மிகவும் வெற்றிகரமாக இருக்கும் என்று நினைக்கிறோம்,” என்று டிரம்ப் கூறினார்.

அமெரிக்காவில் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க EB-5 விசாக்களுக்கு 1990 ல் அமெரிக்க காங்கிரஸ் உருவாக்கியது. $1 மில்லியன் முதலீட்டில் குறைந்தது 10 பேரை வேலைக்கு அமர்த்தும் நிறுவனத்தை உருவாக்கும் மக்களுக்கு இது வழங்கப்பட்டது.
இந்த EB-5 விசாவுக்கு மாற்றாக “டிரம்ப் தங்க அட்டை” கொண்டு வரப்பட்டுள்ளது என்று வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் கூறினார். மேலும் இந்த தங்க அட்டை திட்டம் இன்னும் இரண்டு வாரங்களில் செயல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
தங்க அட்டை, உண்மையில் ஒரு பச்சை அட்டை அல்லது நிரந்தர சட்டப்பூர்வ குடியுரிமை, முதலீட்டாளர்களுக்கான மதிப்பை உயர்த்தும் என்றும், EB-5 திட்டத்தை வகைப்படுத்தும் மோசடி மற்றும் “முட்டாள்தனத்தை” நீக்கும் என்றும் லுட்னிக் கூறினார்.
EB-5 விசாக்கள் பெற தேவையான நிதி சட்டப்பூர்வமாகப் பெறப்பட்டதா என்பதைச் சரிபார்ப்பது உட்பட பல மோசடி அபாயங்கள் இதில் இருப்பதாக 2021ல் காங்கிரஸின் ஆராய்ச்சி சேவை தெரிவித்துள்ளது. மற்ற பச்சை அட்டைகளைப் போலவே, இது குடியுரிமைக்கான பாதையையும் உள்ளடக்கும்.
உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் மிகச் சமீபத்திய குடியேற்ற புள்ளிவிவரங்களின் படி, செப்டம்பர் 30, 2022 உடன் முடிவடைந்த 12 மாத காலத்தில் சுமார் 8,000 பேர் முதலீட்டாளர் விசாக்களைப் பெற்றுள்ளனர்.
உலகம் முழுவதும் முதலீட்டாளர்களுக்கான விசாக்கள் பொதுவானவை. அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், ஸ்பெயின், கிரீஸ், மால்டா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் இத்தாலி உட்பட உலகெங்கிலும் 100 க்கும் மேற்பட்ட நாடுகள் பணக்கார நபர்களுக்கு “தங்க விசாக்களை” வழங்குகிறது.
நிர்ணயிக்கப்பட்ட EB-5 விசாக்கள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் அமெரிக்க அரசுக்கு ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறையைப் போக்க 1 கோடி தங்க அட்டை வரை வழங்க முடியும் என்று உத்தேசமாக கூறிய டிரம்ப் வேலை உருவாக்கத்திற்கான தேவைகள் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.
குடியுரிமைக்கான தகுதிகளை காங்கிரஸ் தீர்மானிக்கிறது, ஆனால் “தங்க அட்டைகளுக்கு” காங்கிரஸின் ஒப்புதல் தேவையில்லை என்று டிரம்ப் கூறினார்.