சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் வரவிருக்கும் பட்ஜெட் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்தியஅரசு பிப்ரவரி 1, 2025 அன்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட்டது. இதில் மாத சம்பளதாரர்களுக்கான வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 12 லட்ச ரூபாய் வரை உயர்த்தப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும் பல்வேறு அறிவிப்புகள் வெயிட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, தமிழ்நாட்டு மக்களை இன்பு அதிர்ச்சிக்குள்ளாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
2026ல் சட்டமன்ற தேர்தல் உள்ள நிலையில், திமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இது என்பதால், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை இடம்பெற செய்ய ஆட்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி தேர்தலை கருத்தில் கொண்டு தயாரிக்கப்படும் பட்ஜெட்டில் இடம்பெறும் அறிவிப்புகள் குறித்து முதலமைச்சர் இன்று அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஏற்கனவே பட்ஜெட் குறித்து பேசிய மு.க.ஸ்டாலின் , அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பட்ஜெட்டாக இருக்க வேண்டும். எனவே பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துகளை பெறுங்கள். அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பட்ஜெட் தயாரிக்க வேண்டும் என நிதியமைச்சரை கேட்டுக்கொண்ட நிலையில், இன்று அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு அறிவிப்புகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக சபாநாயகர் அப்பாவு , வரும் மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும், . இதனை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். இதையடுத்து மார்ச் 15ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதனை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார் என அறிவித்திரந்தார்.
இந்த நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டத்திற்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பட்ஜெட் தொடர்பான பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. இந்த அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்ததும் முக்கிய தகவல்கள் ஏதேனும் வெளியாகி பேசுபொருளாக மாற வாய்ப்பிருக்கிறது. எனவே தமிழக அமைச்சரவை கூட்டம் தொடர்பான செய்திகளை பலரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.