டெல்லி:  மார்ச் 24 மற்றும் 25ந்தேதி  இந்தியா முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதனால்  வார விடுமுறை நாட்களுடன் சேர்ந்து 4 நாட்கள் தொடர்ந்து வங்கிகள் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய வங்கி சேவைகளை முன்கூட்டியே செய்து கொள்வது நல்லது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி தொழிற்சங்கங்கள் 2 நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. அதன்படி  மார்ச் 24ந்தேதி திங்கட்கிழமை மற்றும் 25ந்தேதி செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாட்கள் வங்கிகள் வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்துடன்,  மார்ச் 22, 23 ஆகிய தேதிகள், சனி, ஞாயிறு  வார விடுமுறை நாட்கள் என்பதால், தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் செயல்படாத சூழல் உருவாகி உள்ளது.

வங்கி ஊழியர் சம்மேளனம்,  வாரத்துக்கு 5 நாட்கள் வேலை மற்றும் வங்கித்துறையில் அனைத்து நிலைகளிலும் போதுமான பணியாளர்களை நியமித்தல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி தொழிற்சங்கங்கள் மார்ச் 24 -ம் தேதி முதல் நாடு தழுவிய இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. முன்னதாக இந்திய வங்கிகள் சங்கத்தில் நிலுவையில் உள்ள எஞ்சிய பிரச்சினைகளைத் தீர்க்கவும், அரசு ஊழியர்களுக்கான திட்டத்தின்படி, வருமான வரியிலிருந்து விலக்கு அளிப்பதோடு, பணிக்கொடையை ரூ.25 லட்சமாக உயர்த்தவும் வங்கி ஊழியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் 24 மற்றும் 25-ந்தேதிகளில் நாடு தழுவிய அளவில் 2 நாள் வேலை நிறுத்தம் செய்ய வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய மன்றம் முடிவு செய்துள்ளது. தங்கள் கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை மற்றும் விவாதங்களுக்குப்பின் இந்த வேலை நிறுத்த முடிவை எடுத்துள்ளதாக அந்த மன்றம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய மன்றத்தில் 9 சங்கங்கள் உறுப்பினர்களாக உள்ளன. அந்தவகையில் அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கம், அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, வங்கி ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பு, அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய சங்கங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

அதன்படி, வங்கி ஸ்டிரைக்கானது, வருகிறது 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு வரையிலும் என 48 மணி நேரம் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த வேலைநிறுத்தத்தில் ஊழியர்கள், அதிகாரிகள் உள்பட 8 லட்சம் பேர் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.

இதுதொடர்பாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ரூபம் ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”எங்களுடைய கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க முன்வராததால் வேலைநிறுத்த போராட்டத்துக்கு நாங்கள் தள்ளப்பட்டு உள்ளோம். சிரமம் ஏதேனும் ஏற்பட்டால், அதனை பொறுத்துக்கொண்டு எங்களுடைய வேலைநிறுத்த போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறப்பட்டு உள்ளது. வங்கிகளுக்கு மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமை விடுமுறை ஆகும். அந்தவகையில், 4-வது சனிக்கிழமை வருகிற 22-ந்தேதி வருகிறது. அதற்கு அடுத்த நாளான 23-ந்தேதியும் (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறையாகும். இதற்கு அடுத்த 24, 25-ந்தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து உள்ளனர். இதனால் ஒட்டுமொத்தமாக 4 நாட்கள் தொடர்ச்சியாக வங்கிச்சேவைகள் முடங்கும் அபாயம் இருக்கிறது. எ

னவே வாடிக்கையாளர்கள் அதற்கு தகுந்தாற்போல வங்கி சேவைகளை பெறுவதற்கு முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு வங்கி ஊழியர் சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.