அதானியின் ஊழல் குறித்து அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி அது ஒரு தனிநபரின் விவகாரம் என்று பதிலளித்தார்.

இதனை விமர்சித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இது அதானியின் ஊழல் நடவடிக்கைகளை திரை போட்டு மறைக்கும் செயல் என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவில் இரண்டு நாள் அரசு முறை பயணமாக சென்ற இந்திய பிரதமர் மோடி அங்கு அந்நாட்டு அதிபர் டிரம்ப் மற்றும் உலகின் முன்னணி பணக்காரர் எலோன் மஸ்க் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்திய தொழிலதிபரான கெளதம் அதானி அமெரிக்காவில் ஊழல் வழக்கில் சிக்கியுள்ளது தொடர்பாக அதிபர் டிரம்புடன் பேசினீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த மோடி, “இந்தியா ஒரு ஜனநாயக நாடு, நமது கலாச்சாரம் ‘வசுதைவ குடும்பகம்’. உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக நாங்கள் கருதுகிறோம். ஒவ்வொரு இந்தியனும் என்னுடையவர் என்று நான் நம்புகிறேன். இரண்டு நாடுகளின் இரண்டு முக்கியத் தலைவர்கள் இதுபோன்ற தனிப்பட்ட பிரச்சினைகளைப் பற்றி ஒருபோதும் விவாதிப்பதில்லை” என்று அவர் கூறினார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “கவுதம் அதானியின் ஊழல் நடைமுறைகளுக்கு அமெரிக்காவில் கூட பிரதமர் மோடி திரைச்சீலை போட்டு மறுத்திருக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.

“இந்தியாவில் அதானி குறித்து கேள்வி எழுப்பினால் அமைதியாக இருக்கிறார், வெளிநாட்டில் கேட்கும்போது, ​​அது ஒரு ‘தனிப்பட்ட விஷயம்’ என்று கூறுகிறார்.

ஒரு நண்பரின் பாக்கெட்டுகளை நிரப்புவது பிரதமர் மோடிக்கு ‘தேசத்தைக் கட்டியெழுப்பும் செயல்’ என்றால், லஞ்சம் வாங்குவதும் நாட்டின் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதும் ‘தனிப்பட்ட விஷயம்’ மட்டுமே” என்று ராகுல் காந்தி மேலும் குறிப்பிட்டுள்ளார்.