அமெரிக்க பெடரல் அரசுத் துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள புரொபேஷன் பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

சிவில் சர்வீஸ் பாதுகாப்பைப் பெறாத கிட்டத்தட்ட அனைத்து தகுதிகாண் ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய அரசுத் துறைகளுக்கு கடந்த செவ்வாயன்று டிரம்ப் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து நேற்று வியாழன் முதல் இந்த நடவடிக்கை துவங்கியுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த பணிநீக்க உத்தரவால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவில் அதிளவிலான ஊழியர்களைக் கொண்ட பெடரல் அரசில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை அரசு ஊழியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வருடத்திற்கும் குறைவாக பணியில் இருக்கும் தகுதிகாண் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக கூட்டாட்சி அரசாங்கத்தின் மனிதவளத் துறையாகச் செயல்படும் பணியாளர் மேலாண்மை அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜனாதிபதி டிரம்ப் தனது அரசாங்க செயல்திறன் துறையுடன் அரசாங்க செலவினங்களைக் குறைக்க பரந்த வாய்ப்பை வழங்கிய எலோன் மஸ்க், வியாழக்கிழமை முழு நிறுவனங்களையும் நீக்குவதற்கு அழைப்பு விடுத்தார்.

“இந்த பணி நீக்க நடவடிக்கை பாரபட்சமின்றி அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்று மஸ்க் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் நடந்த உலக அரசாங்கங்கள் உச்சி மாநாட்டில் ஒரு வீடியோ அழைப்பு மூலம் கூறினார். “களைகளின் வேர்களை நாம் அகற்றவில்லை என்றால், களைகள் மீண்டும் வளர்வது எளிது.” என்றும் அவர் கூறினார்.

அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்க அரசு ஊழியர் கூட்டமைப்பின் தலைவர் எவரெட் கெல்லி, நிர்வாகம் தொழிலாளர்களின் தகுதிகாண் நிலையை “துஷ்பிரயோகம் செய்துள்ளது” என்று கூறினார்.

“இந்த ஊழியர்களை அவர்களது செயல்திறன் காரணமாக அல்லாமல், டிரம்ப் பதவியேற்பதற்கு முன்பு அவர்கள் பணியமர்த்தப்பட்டதால், அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த பணிநீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று அவர் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த பணிநீக்க நடவடிக்கை பெரிய அளவிலான பணிநீக்கங்களில் முதல் படியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.