வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். இதையடுத்த மும்பையில் குண்டு வெடிப்பை நடத்திய, பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த குற்றவாளியை இந்தியாவுக்கு நாடுகடத்த அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் சில ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி உள்ளது.

பிரான்ஸ் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 12ந்தேதி அமெரிக்காவுக்கு சென்றார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள விமானப் படை தளத்தில் தரையிறங்கிய அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிகாலை நேரத்தில் கடும் குளிரை பொருட்படுத்தா மல் இந்திய வம்சாவளியினர் திரண்டு வந்து அவரை உற்சாகமாக வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து அழைத்து செல்லப்பட்ட பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் மாளிகையில் உள்ள விருந்தினர் இல்லமான பிளேர் ஹவுஸுக்கு சென்றார். உலகின் முக்கிய தலைவர்கள் மட்டுமே பிளேர் ஹவுஸில் தங்க வைக்கப்படுகின்றனர்.
இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி, அமெரிக்காவின் தேசிய உளவு துறை இயக்குநராக உள்ள இந்து மதம் மீதான அதீத பக்திகளை கொண்டுள்ள துளசி கப்பார்ட் ஐ சந்தித்துப் பேசினார். பிரதமர் மோடி, துளசி சந்திப்பின்போது தீவிரவாத ஒழிப்பு, சைபர் பாதுகாப்பு குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர். பகவத் கீதையால் ஈர்க்கப்பட்ட இவர் சிறுவயது முதலே இந்து மதத்தை பின்பற்றி வருகிறார். இவரின் கட்டுப்பாட்டில்தான், அமெரிக்காவின் சிஐஏ, என்எஸ்ஏ உட்பட அமெரிக்காவின் 18 புலனாய்வு அமைப்புகள் செயல்படுகின்றன.
இதைத்தொடர்ந்துஅமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு (இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணி ) அதிபர் டொனால்டு ட்ரம்பை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கி, கட்டியணைத்து ஒருவரை ஒருவர் நலம் விசாரித்தனர். அப்போது, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ட்ரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அதிபர் ட்ரம்பை சந்தித்த 4-வது உலக தலைவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து, 45 நிமிடங்கள் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு, வர்த்தகம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடனிருந்தனர். அமெரிக்க உயர் அதிகாரிகளும் இந்த பேச்சுவார்த்தையில் இடம்பெற்றிருந்தனர்.

இதைத்தொடர்ந்து, கச்சா எண்ணெய் தொடர்பாக இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதனப்டி, அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுவை அதிகளவில் இந்தியா கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது. 2008 மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, இந்தியாவின் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு முதன்மை இறக்குமதி யாளராக இனி அமெரிக்கா திகழும் என தெரிவித்ததுடன், மும்பை தாக்குதல் குற்றவாளி இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்றும், பயங்கரவாத அச்சுறுத்தலை முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியாவுடன் இணைந்து எதிர்கொள்வோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ம்பை பயங்கரவாத தாக்குதல்களில் (26/11) ஈடுபட்டு, இந்தியாவில் தேடப்படும் தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த தனது நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த கனடா நாட்டவரான ராணா தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் 26/11 தாக்குதலில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான டேவிட் கோல்மன் ஹெட்லியுடன் தொடர்புடையவர் என்று அறியப்படுகிறது.
அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இது குறித்து பேசிய அவர், “மும்பை கொடூர பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக செயல்பட்டவனும், உலகின் மிகவும் மோசமான நபரை இந்தியாவில் சட்ட நடவடிக்கை எதிர்கொள்ள நாடு கடத்துவதற்கு எனது நிர்வாகம் ஒப்புதல் அளித்து இருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதனால் அவர் இந்தியாவுக்கு சென்று நீதியை எதிர்கொள்ள இருக்கிறார்,” என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “பிரதமர் நரேந்திர மோடி என்னை விட மிகவும் கடினமான பேச்சுவார்த்தையாளர், அவர் என்னை விட மிகச் சிறந்த பேச்சுவார்த்தையாளர். ஒரு போட்டி கூட இல்லை. வரலாற்றிலேயே மிகப்பெரிய வர்த்தக பாதைகளில் ஒன்றை உருவாக்க நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டோம். இது இந்தியாவிலிருந்து இஸ்ரேல் முதல் இத்தாலி வரை, பின்னர் அமெரிக்கா வரை செல்லும், எங்கள் கூட்டாளிகள், சாலைகள், ரயில்வே மற்றும் கடலுக்கடியில் கேபிள்களை இணைக்கும். இது ஒரு பெரிய வளர்ச்சி. இதற்கு நிறைய பணம் செலவிடப்பட உள்ளது, நாங்கள் ஏற்கனவே சிலவற்றைச் செலவிட்டுள்ளோம், ஆனால் முன்னேறி தலைவராக இருக்க நாங்கள் இன்னும் நிறைய செலவிடப் போகிறோம்.
இன்றைய அறிவிப்புகளுடன், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நட்புறவு மிகவும் வலுவானது என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், அது எப்போதும் இருந்ததில்லை என்று நான் நம்புகிறேன். இரு நாடுகளின் இரண்டு தலைவர்களுக்கும் இடையிலான எங்கள் உறவு இதுவரை இல்லாத அளவுக்கு சிறந்தது என்று நான் நினைக்கிறேன்.
IMEC இந்தியாவை வளைகுடா பிராந்தியத்துடன் இணைக்கும் கிழக்குப் பாதையையும், வளைகுடா பிராந்தியத்தை ஐரோப்பாவுடன் இணைக்கும் வடக்குப் பாதையையும் கொண்டுள்ளது. இதில் ரயில் மற்றும் கப்பல்-ரயில் போக்குவரத்து வலையமைப்பு மற்றும் சாலைப் போக்குவரத்து வழிகள் அடங்கும். 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற G20 உச்சி மாநாட்டின் போது, இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் IMEC குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த ஆண்டு தொடங்கி, இந்தியாவிற்கு இராணுவ விற்பனையை பல பில்லியன் டாலர்களால் அதிகரிப்போம். இறுதியில் இந்தியாவிற்கு F35 ஸ்டீல்த் போர் விமானங்களை வழங்குவதற்கும் நாங்கள் வழி வகுக்கிறோம். 2017 ஆம் ஆண்டில், எனது நிர்வாகம் குவாட் பாதுகாப்பு கூட்டாண்மையை புதுப்பித்து மீண்டும் உயிர்ப்பித்தது. பிரதமரும் நானும் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் இடையே வலுவான ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். மேலும் இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, செழிப்பு, அமைதியைப் பேணுவது மிகவும் முக்கியமானது.
இந்தியாவிற்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வழங்கும் முன்னணி நாடாக அமெரிக்கா இருப்பதை உறுதி செய்யும் எரிசக்தி தொடர்பான ஒரு முக்கியமான ஒப்பந்தத்தையும் நானும் பிரதமர் மோடியும் எட்டினோம்.
அமெரிக்க அணுசக்தித் துறைக்கான புரட்சிகரமான வளர்ச்சியில், இந்திய சந்தையில் மிக உயர்ந்த மட்டத்தில் இருக்கும் அமெரிக்க அணுசக்தி தொழில்நுட்பத்தை வரவேற்கும் வகையில் இந்தியா சட்டங்களை சீர்திருத்துகிறது. வரலாற்றில் மிகப்பெரிய வர்த்தக பாதைகளில் ஒன்றை உருவாக்க உதவுவதற்கு நாங்கள் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டோம்”.
இவ்வாறு கூறினார்.