சென்னை: பள்ளி கல்வித்துறையில் 238 பேர் பாலியல் புகாரில் சிக்கியுள்ளனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டு உள்ளார்.
ஆசிரியர்கள், ஊழியர்கள் மீதான போக்சோ வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கல்வி சான்றிதழ் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். பள்ளிகளில் உள்ள மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பாலியல் புகார்களை முறையாக விசாரிக்க தவறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் கடந்த 10 ஆண்டுகளில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள ஆசிரியர்கள், அலுவலர்கள் யார் என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 238 பேர் கொண்ட பட்டியல் தயாராகி உள்ளது. அவர்கள் மீதான விசாரணையை விரைந்து முடிக்க விசாரணை அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை, மற்றும் கிருஷ்ணகிரி, நெல்லை, பாளையங்கோட்டை, திருப்பூர், உடன்குடி என பல பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த விவகாரம், கடந்த வாரம் வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு, ரயிலில் இருந்து கீழே தள்ளி விடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசை குற்றம்சாட்டி வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் தமிழக மக்களிடையே பெரும் அச்சத்தையும், ஆட்சியாளர்கள் மீது அதிருப்தியையும் உருவாக்கி உள்ளது.
இதையடுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் முருகானந்தம் தலைமையில் நேற்று (புதன்கிழமை) முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பள்ளிகளில் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டால் 14417 என்ற எண்ணில் உதவி மையத்தை உடனடியாக அழைத்து புகார் அளிக்குமாறு பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் ஆலோசனை நடத்தினார். இதில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலவலகர்கள் உள்பட பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர். அவர்களிடம் பொதுத்தேர்வு மற்றும் அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும், சமீப காலமாக பள்ளிகளில் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை மற்றும், பாலியல் புகாரில் சிக்குபவர்கள் மீதான நடவடிக்கைள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கும் ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள், புகார் தொடர்பாக, சில நாள் சஸ்பெண்ட் ஆகி ஜாமின் பெற்று வெளியே வந்துவிடுகின்றனர். மேலும், மற்றொரு பள்ளியில் பணியில் சேரக்கூடிய நிலை தற்போது காணப்படுகின்றது. இதனை முற்றிலும் தவிர்க்க பாலியல் புகாரில் சிக்குவோருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் விதிகளை திருத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புதிய விதிகள் குறித்து ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஆசிரியர்கள், ஊழியர்கள் மீதான போக்சோ வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கல்வி சான்றிதழ் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். பள்ளிகளில் உள்ள மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பாலியல் புகார்களை முறையாக விசாரிக்க தவறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் கடந்த 10 ஆண்டுகளில் 238 பேர் பாலியல் புகாரில் சிக்கியுள்ளனர். அவர்கள் மீதான விசாரணையை விரைந்து முடிக்க விசாரணை அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழ்நாடு முழுவதும் 25,57,357 மாணவர்கள் இவ்வாண்டு பள்ளி பொதுத்தேர்வை எழுத உள்ளனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது. 10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.