டெல்லி: பச்சிளம் குழந்தைகள் மரணத்தைத் தடுப்பதில்  தமிழ்நாடு  அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.யின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். குழந்தைகள் மரணிப்பதில் 1000 குழந்தைகளில் 9 பேர் என்ற குறைந்த எண்ணிக்கையுடன் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கேள்வி நேரத்தின்போது, தி.மு.க. எம்.பி. டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு . இந்தியாவில் பிரசவ கால தாய் சேய் மரணங்கள், பச்சிளம் குழந்தை மரணங்கள் எவ்வளவு? அதைத் தடுக்க, குறைக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? இந்தியாவில் 16 சதவிகித கர்ப்பிணிப்பெண்களுக்கு எந்தவிதமான ஊட்டச்சத்தும் வழங்கப்படுவதில்லை என்பது உண்மைதானா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு   மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா  பதில் அளித்தார். அப்போது,  இந்தியாவில், பிரசவ காலத்தில் தாய் இறப்பது தொடர்பான எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் 83 சதவிகிதம் குறைந்திருக்கிறது.

உலக அளவில் இதே கால கட்டத்தில் 42 சதவிகிதம்தான் குறைந்திருக்கிறது.

பச்சிளம் குழந்தைகள் மரணிக்கும் விகிதமும் இந்தக் காலகட்டத்தில் 65 சதவிகிதம் குறைந்திருக்கிறது. உலக அளவில் இது 51 சதவிகிதமாக இருக்கிறது.

மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து பிரசவ காலம் தொடர்பான, கர்ப்பிணிகள் தொடர்பான விழிப்புணர்வு முகாம்களை ஒன்றிய அரசு நாடு முழுக்க நடத்துகிறது. குறிப்பாக மாதத்தில் ஒருநாள் கிராமப்புற பகுதிகளில் விழிப்புணர்வு முகாம் நடத்துவது, சுகாதார மேளாக்கள் நடத்துவது, ஊட்டச்சத்து இலவசமாக வழங்குவது மற்றும் அது தொடர்பான ஆலோசனை வழங்குவது, குழந்தையின்மை தொடர்பான சிகிச்சைகளுக்கு ஆலோசனை வழங்கும் முகாம்கள் நடத்துவது, நடமாடும் சுகாதார மையங்களை கிராமப்புறங்களில் பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன.

இதுதவிர பிரசவ காலத்தைக் கடக்கும் பெண்களின் நலனுக்காக பிரதமரின் பெயரில் அமைந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதம் 9ம் தேதி இலவச சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கும் திட்டமும் அமலில் இருக்கிறது. இதற்காக 2021-22 ம் ஆண்டு 9 கோடி ரூபாயும், 2022-23 ம் ஆண்டில் 42 கோடி ரூபாயும், 2023-24ம் ஆண்டில் 83 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டுகளில் முறையே 3.46 லட்சம்; 3.29 லட்சம்; 3.31 லட்சம் கர்ப்பிணிப் பெண்கள் பயனடைந்திருக்கிறார்கள்.

மேலும்,  தமிழகத்தைப் பொறுத்தவரை, ஒரு லட்சம் கர்ப்பிணிகளில் 54 பேர் மரணிக்கிறார்கள் என்று தரவுகள் சொல்கிறது.

பிரசவ காலத்தில் தாய் மரணிக்கும் நிகழ்வை குறைவாக வைத்திருக்கும் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாவது சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது.

அதேபோல பிரசவ காலத்தில் குழந்தைகள் இறப்பது தமிழகத்தில் ஆயிரம் பேருக்கு இரண்டு என்ற அளவிலேயே இருக்கிறது.

பச்சிளம் குழந்தைகள் மரணிப்பதில் பெரிய மாநிலங்களைப் பொறுத்தவரை ஆயிரம் குழந்தைகளில் 9 பேர் என்ற குறைந்த எண்ணிக்கையைப் பதிவு செய்து சிறப்பாக செயல்பட்டு தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருக்கிறது.

இவ்வாறு கூறியுள்ளார்.