சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் சந்திரகுமார் முதல்வர் முன்னிலையில் இன்று காலை எம்எல்ஏவாக பொறுப்பேற்றார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் திருமகன் ஈவேரா  போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவர் கடந்த 2024ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக  மரணமடைந்த நிலையில்,  அடுத்து வந்த இடைத் தேர்தலில் அவரது தந்தை இவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கினார். அவரும்,  கடந்த  2024ம் ஆண்டு டிசம்பர் மாதம்  வயது மூப்பு மற்றும் நோய் காரணமாக உயிரிழந்ததால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2025 பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.. இந்த தேர்தலை அனைத்து எதிர்க்கட்சிகளும் புறக்கணித்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு பதிலாக திமுகவே களமிறங்கியது. அதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி மட்டுமே களமிறங்கியது. மேலும் சுயேச்சைகள் உள்பட  46 வேட்பாளர்கள் போட்டி யிட்டனர். இந்த தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று  (பிப்ரவரி 5ந்தேதி) காலை 8மணி முதல் எண்ணப்பட்டன. மொத்தம் 17 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், இறுதியாக 1,17,158 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி 23,872 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

மொத்தம் பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்கு பெறுவோர் டெபாசிட் தொகையை தக்க வைப்பர். அதன்படி ஈரோடு இடைத்தேர்தலில் டெபாசிட் தொகை பெறுவதற்கு 25,777 வாக்குகள் பெற வேண்டிய சூழலில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாக்குகளை பெற முடியாததால் நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்துள்ளது. அதேசமயம் 75% வாக்குகளை பெற்று திமுக வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரகுமார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக சந்திரகுமார் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.