வேலூர்: ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கீழே தள்ளிவிட்ட வாலிபர் ஹேமராஜ் என்பவரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்து, நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோயம்புத்தூரில் இருந்து திருப்பதிக்குச் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்கள் மட்டும் பயணம் செய்யும் பெட்டியில், பிப்ரவரி 6 இரவு பயணம் செய்த கர்ப்பிணி பெண் ஒருவரிடம் இரவு சுமார் 9.00 மணியளவில், வாலிபர் ஒருவர் பாலியல் சேட்டையில் ஈடுபட்டதுடன், அவரை ரயில் பெட்டியில் இருந்து கீழே தள்ளியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சம்பவத்தின்போது அந்தரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தபோது, அந்த பெட்டியில் ஏறிய இளைஞரிடம், அதில் இருந்த பெண்கள், இது பெண்கள் மட்டும் பயணிக்கும் பெட்டி என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பெண் கேள்வியெழுப்பியதால், வாக்குவாதம் முற்றி கைகலப்பாகியுள்ளது.
இந்த நிலையில், அந்த கர்ப்பிணிப் பெண் தனது இருக்கையிலிருந்து எழுந்து ரயிலில் கழிவறைக்குச் சென்றுள்ளார். அதைப்பார்த்த இளைஞர், பெண்ணை பின் தொடர்ந்து கழிவறைக்கு அருகே இருக்கும் ரயில் பெட்டியின் வாசல் அருகே நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அந்த பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட அவரை கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல், ரயில் வேலூர் காட்பாடிக்கு முன்பு உள்ள கே.வி குப்பம் அருகே மெதுவாக வந்து கொண்டிருந்த போது, அந்த பெண்ணை, அந்த நபர் ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். ரயில் பாதையில் கீழே விழுந்த அந்த பெண் வலி தாங்க முடியாமல் அலறியதைக் கண்ட அப்பகுதி மக்கள், பலத்த காயங்களுடன் இருந்த பெண்ணை மீட்டு, உடனடியாக கே.வி குப்பம் காவல்துறையினருக்கும், 108 அவசர ஊர்திக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த பெண் கே.வி.குப்பம் மருத்துவமனையில் பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர், குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட நபரை ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறை யினரும், கே.வி.குப்பம் காவல் துறையினரும் இணைந்து தேடினர். மேலும், ரயில்வே குற்றப்பதிவேட்டில் இருந்த புகைப்படங்களை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் காட்டியதில், அதில் ஹேமராஜ் என்பவரை அடையாளம் காட்டினார்.
அதன்படி, கே.வி.குப்பத்தைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவர் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து கண்காணிப்பு கேமராப் பதிவுகளைக் கொண்டு ஹேமராஜை நோட்டமிட்ட காவல்துறை, அவர் காட்பாடி ரயில் நிலையத்தில் இறங்கி வீட்டிற்கு செல்லும் வழியில் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர், ஹேமராஜை ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் அதிடியாக கைது செய்தனர். இவர்மீது ஏற்கனவே , 2022-ஆம் ஆண்டில் ரயில் நிலையங்களில் செல்போன் பறிப்பு, ரயில் பயணிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உள்பட பல்வேறு வழக்குகளில் இவர் சம்பந்தப்பட்டிருப்பதும், 2024-ம் ஆண்டு சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பெண்ணை ரயிலில் வரவழைத்து குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள மலை பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்த வழக்கும், 2022 ஆம் ஆண்டு காட்பாடி ரயில் நிலையத்தில் செல்போனை பறித்துக் கொண்டு ரயிலில் இருந்து இளம் பெண்ணை தள்ளிவிட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் அவர் பிணையில் வெளியே இருப்பதும் தெரியவந்தது.
இந்த சம்பவம் ரயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.