மும்பை : 5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் 6.25% ஆக குறைக்கப்படுவதாக ஆர்பிஐ புதிய கவர்னர் மல்ஹோத்ரா அறிவித்து உள்ளார். இது குறுகியகால கடன்கள் பெற்ற சாமானிய மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
மேலும், இணைய மோசடிகளைத் தடுக்க வங்கிகளுக்கு பிரத்யேக டொமைன் பெயர் உருவாக்கப்பட இருப்பதாகவும் கூறினார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு (MPC) இன்று 3 நாள் கூட்டம் நடைபெற்ற முடிந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அதன் விவரத்தை ஆர்பிஐ கவர்னர் புதிய கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்து உள்ளார். முன்னதாக, முந்தைய கவர்னர் சக்தி காந்ததாஸ் பணியில் இருந்தபோது, கடந்த 11 முறை ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாமல் 6.5 சதவிகிதமாக தொடர்ந்த நிலையில், அவரது ஒய்வுக்கு பிறகு புதிய கவர்னராக பதவி ஏற்றுள்ள சஞ்சய் மல்ஹோத்ரா ரெப்போ வட்டியை மேலும் 2.5 சதவிகிதம் குறைத்து, 6.25 சதவிகிதமாக்கி அறிவித்து உள்ளார்.
கொரோனா தாக்கத்தையொட்டி கடைசியாக கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டு 4% ஆக இருந்தது. அதன்பிறகு படிப்படியாக அதிகரிக்கப்பட்ட ரெப்போ வட்டி விகிதம் 2023 பிப்ரவரியில் 6.5% ஆக அதிகரித்த நிலையில், கடந்த 10 முறை ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் இல்லாமல் தொடர்ந்து வந்தது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக அண்மையில் பதவியேற்ற சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில், நிதி கொள்கை கூட்டம் கடந்த 5ம் தேதி முதல் இன்று வரை நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் அறிவிப்புகளை வெளியிட்டார் சஞ்சய் மல்ஹோத்ரா.
அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதத்தில் இருந்து 6.25%-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த வட்டி விகிதக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் கால் சதவீதம் குறைப்பால் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் குறுகிய கால கடன்களுக்கான வட்டியும் குறைய வாய்ப்பு உள்ளது.
“நிலையான வைப்பு வசதி, SDF விகிதம் 6.0% ஆகவும், விளிம்பு நிலை வசதி விகிதம், MCF விகிதம் மற்றும் வங்கி விகிதம் 6.5% ஆகவும் இருக்கும்…”
மேலும், 2026ம் ஆண்டிற்கான பணவீக்கம் 4.2% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் காலாண்டில் 4.5%, இரண்டாவது காலாண்டில் 4% மற்றும் மூன்றாவது காலாண்டில் 3.8% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 ம் ஆண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இலக்கை 6.6% லிருந்து 6.7% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

“பணவீக்கம் குறைந்து வருகிறது, உணவுப் பொருட்கள் விலை நிலை குறித்த சாதகமான கணிப்பின் அடிப்படையில், பணவீக்கம் மேலும் குறைந்து ஆர்பிஐ இலக்குடன் ஒத்துப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தார். மேலும், அக்டோபர் மாதத்தில் அதன் சமீபத்திய உச்சமான 6.2 சதவீதத்திலிருந்து 2024 நவம்பர்-டிசம்பர் மாதங்களில் மொத்தப் பணவீக்கம் தொடர்ச்சியாக தணிந்தது. உணவுப் பணவீக்கத்தில் மிதமான அளவு, காய்கறி விலை பணவீக்கம் அக்டோபர் மாத உயர்விலிருந்து வந்ததால், மொத்த பணவீக்கத்தில் சரிவு ஏற்பட்டது. ஜனவரி 31, 2025 நிலவரப்படி இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 630 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது என்று ஆளுநர் மல்ஹோத்ரா கூறினார்.
இந்திய சந்தையில் டிமாண்ட் அளவை பார்க்கும்போது, கிராமப்புற தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, ஆனால் நகர்ப்புற தேவை குறைவாகவே உள்ளது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதன் முக்கிய கொள்கை விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்ததைத் தொடர்ந்து, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மாறாமல் இருந்தது.
மேலும், இணைய மோசடிகளைத் தடுக்க வங்கிகளுக்கு ‘http://fin.in’ என்ற பிரத்யேக டொமைன் பெயர் இருக்கும், இதற்கான ரிஜிஸ்ட்ரேஷன் ஏப்ரல் மாதம் தொடங்கும் என்றும், ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகளின் வர்த்தகம் மற்றும் செட்டில்மென்ட் நேரத்தை மறுபரிசீலனை செய்ய ரிசர்வ் வங்கி ஒரு பணிக்குழுவை அமைக்கும் என்று ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்தார்.
புதிய அறுவடை காலத்தில் பயிர் வரத்து அதிகரிக்கும் நிலையில் உணவுப் பணவீக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ரிசர்வ் வங்கியின் கவர்னப் சஞ்சய் மல்ஹோத்ரா நாணய கொள்கை முடிவுகளை அறிவிக்கும் போது தெரிவித்தார்.
பணவியல் கொள்கை குறித்த அறிக்கையை வெளியிடுகையில், “உலக வங்கியின் கூற்றுப்படி, கடந்த 2024 ஆம் ஆண்டு காலண்டர் ஆண்டில் 129.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரத்துடன் உலகளவில் அதிக பணம் அனுப்பும் நாடாக இந்தியா தொடர்ந்து உள்ளது. இந்த ஆண்டுக்கான நடப்புக் கணக்கு பற்றாக்குறை நிலையான அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 630 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது 10 மாதங்களுக்கும் மேலான இறக்குமதி பாதுகாப்பை எங்களுக்கு வழங்குகிறது. முக்கிய குறிகாட்டிகள் வலுவாக இருப்பதால் ஒட்டுமொத்தமாக இந்தியாவின் வெளித்துறை மீள்தன்மையுடன் உள்ளது.
பல ஆண்டுகளாக ரிசர்வ் வங்கியின் மாற்று விகிதக் கொள்கை மிகவும் சீராக உள்ளது. சந்தை செயல்திறனை சமரசம் செய்யாமல் ஒழுங்கு மற்றும் நிலைத்தன்மையை பராமரிப்பதே எங்கள் கூறப்பட்ட நோக்கம். அந்நியச் செலாவணி சந்தையில் எங்கள் தலையீடுகள் அதிகப்படியான மற்றும் சீர்குலைக்கும் ஏற்ற இறக்கத்தை மென்மையாக்குவதில் கவனம் செலுத்துகின்றன. இது எந்த குறிப்பிட்ட இலக்கையும் இலக்காகக் கொண்டிருக்கவில்லை.” என்றும் தெரிவித்தார்.
மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த தனிநபர் வருமான வரி குறைப்பு நடவடிக்கை, இந்த வட்டி விகிதக் குறைப்புக்கான காரணமாக அமைந்துள்ளது. மத்திய நிதியமைச்சக தரப்பில் இருந்தும், மத்திய அரசு தரப்பில் இருந்தும் நாட்டின் நுகர்வோர் சந்தையை மேம்படுத்தவும், பொருளாதாரத்தை மந்த நிலையில் இருந்து மீட்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் வேளையில் குறிப்பாக பட்ஜெட் அறிவிப்புக்கு பின்பு ரெப்போ விகிதம் குறைவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆர்பிஐ-யும் ரெப்போ வட்டியை குறைத்துள்ளது.