நெல்லை:  திருநெல்வேலி மாவட்டத்தில் களஆய்வு செய்து வரும் முதலமைச்சர் ஸ்டாலின், இன்று தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு உபரி நீர் இணைப்பு திட்டத்தை தொடங்கி வைத்ததுடன்,  75000 பேருக்கு நலத்திட்டஉதவி வழங்கினார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக அரசு திட்டப்பணிகளை களஆய்வு செய்தும், முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் வருகிறார்.  அந்த வகையில் இரண்டு நாள்கள் சுற்றுப்பயணமாக  நேற்று  பிப்ரவரி 6) காலை திருநெல்வேலி மாவட்டத்திற்கு சென்றார். அவரை  வழிநெடுக பொதுமமக்கள் கட்சியினர்  வரவேற்றனர்.

பின்னர், திருநெல்வேலி அருகே உள்ள  கங்கைகொண்டான் சிப்காட் சென்ற  முதல்வர் மு.க.ஸ்டாலின் நண்பகல் 12.15 மணிக்கு 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ. 4,400 கோடியில் அமைக்கப்பட்டுள்ள டாடா சோலார் பேனல் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கி வைத்தார்.  மேலும் சிப்காட்டில் அமைக்கப்பட்டுள்ள உணவு பூங்காவையும் முதல்வர் திறந்து வைத்ததுடன்,   அங்கு புதிதாக அமைக்கப்படும் விக்ரம் சோலார் பேனல் பசுமை தொழிற்சாலைக்கும் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மதியம் 1.30 மணிக்கு நெல்லை வண்ணார்பேட்டை விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்தவர்,  மாலை 5 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டையில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள காந்தி மார்க்கெட் வளாகத்தை திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு திமுக முக்கிய நிர்வாகிகளுடன் பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் ஆலோசனை நடத்தினார். பின்னர்  பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வண்ணார்பேட்டை விருந்தினர் மாளிகையில் இரவு தங்கியவர், இன்று  (பிப்ரவரி 7ஆம் தேதி) காலை  வண்ணார்பேட்டை முதல் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மைதானம் வரை 5 கிமீ தூரம் ரோடு ஷோ சென்றார். அவருக்கு சாலையின் இருமங்கிலும் ஏராளமானோர் கூடி நின்று வரவேற்றனர்.

இதையடுத்து, பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடக்கும் அரசு விழாவில் கலந்து கொள்ளும் முதல்வர் திருநெல்வேலி மாவட்டத்திற்கு ரூ.9 ஆயிரத்து 368 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்ததுடன்,   புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, 75 ஆயிரத்து 151 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன்படி, நெல்லையில் 75,151 பயனாளிகளுக்கு ரூ.167 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

நெல்லை மேற்கு புறவழிச்சாலை 1 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

ரூ.1304 கோடி செலவில் 23 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

ரூ.309.05 கோடி மதிப்பிலான 20 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு உபரி நீர் இணைப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார்.  ரூ.1,061 கோடியில் உபரிநீர் இணைப்பு வெள்ள நீர் கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டது.

இதையடுத்து, 12  மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.