சென்னை: தைப்பூசம் மற்றும் முகூர்த்த நாட்களையொட்டி, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது.

தமிழ் கடவுளாக பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். முருகனுக்கு மிகவும் உகந்த நாட்களுள் தைப்பூசமும் ஒன்றாகும். தைப்பூசம் என்பது தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரக்கூடிய நன்னாளாகும். இந்த நாளில்தான், அன்னை தன் தவப்புதல்வனுக்கு வேல் வழங்கிய நாளாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தை பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம்.
நடப்பாண்டிற்கான தைப்பூசம் வரும் பிப்ரவரி 11ம் தேதி (செவ்வாய்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்காக முருக பக்தர்கள் முழு மூச்சில் தயாராகி வருகின்றனர். தைப்பூசமானது ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழாவாக முருகப் பக்தர்களால் கொண்டாடப்படும். அன்றைய தினம் முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதற்காக பல பகுதிகளில் இருந்தும் மக்கள் கோவிலுக்கு படையெடுப்பார்கள்.
இந்த நிலையில், வளர்பிறை முகூர்த்தம், தைப்பூசம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “07/02/2025 (வெள்ளிக்கிழமை), 08/02/2025 (சனிக்கிழமை) மற்றும் 09/02/2025 (ஞாயிறுக் கிழமை) என வார விடுமுறை நாட்கள், முகூர்த்தம் மற்றும் தைப்பூசம் முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாகச் சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று 380 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், சனிக்கிழமை 530 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக் கிழமை அன்று 60 பேருந்துகளும், சனிக்கிழமை அன்று 60 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்புப் பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதவரத்திலிருந்து வெள்ளிக்கிழமை அன்று 20 பேருந்துகளும், சனிக்கிழமை அன்று 20 பேருந்துகளும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாகப் பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே தொலைதூர பயணம் மேற்கொள் இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in என்ற இணைய தளம் மற்றும் மொபைல் செயலி (Mobile App) மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது”
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]