டெல்லி: பிப்ரவரி 5ந்தேதி நடைபெற்று முடிந்த டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில், 60 .42 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அங்கு ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்பது குறித்து பிப்ரவரி 8ந்தேதி அன்று தெரிய வரும்.

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கான தேர்தல் நேற்று (பிப்ரவரி 5ந்தேதி) ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆட்சி தக்க வைக்கும் முயற்சியில், ஆளும் ஆம் ஆத்மி கட்சியும், ஆட்சியை கைப்பற்ற பாஜக, காங்கிரஸ் கட்சிகளும் கடுமையாக நெருக்கடி கொடுத்தன. அங்கு மும்முனை போட்டி நிலவியது.
இந்த தேர்தலில், ஆம் ஆத்மியும், காங்கிரசும் 70 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நிலையில், பிரதான எதிர்க்கட்சியான பாஜக 68 தொகுதிகளில் களம் கண்டது. மீதமுள்ள இரண்டு தொகுதிகளில் பாஜகவின் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளமும், லோக்தந்திரிக் ஜன சக்தி கட்சியும் போட்டியிட்டன.
டெல்லியில் மொத்தமுள்ள 70 சட்டப் பேரவை தொகுதிகளில், 96 பெண்கள் உள்பட மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று அங்கு விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
காலை 7மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6மணியுடன் முடிவடைந்தது. மாலை 6 மணி நிலவரப்படி 60 புள்ளி 42 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. தேர்தல் முடிவு வரும் 8-ம் தேதி அறிவிக்கப்படுகிறது. டெல்லியில் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதுமின்றி தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது.
டெல்லியில் கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, (பிப்ரவரி 7, 2015) அன்று நடைபெற்றது. ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 இடங்களில் 67 இடங்களை வென்று சட்டமன்றத்தில் முழுமையான பெரும்பான்மையைப் பெற்றது. இதையடுத்து, 2020ல் டெல்லி சட்டமன்றத்திற்கு 70 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக பிப்ரவரி 8, 2020 அன்று நடைபெடற்ற தேர்தலின்போது, 62.82% வாக்குகள் கதிவானது. இதில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை வென்று தேர்தலில் முழுமையான பெரும்பான்மையைப் பெற்றது. இந்தமுறையும் ஆம்ஆத்மி கட்சி 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கெஜ்ரிவால் உள்பட சிலர்மீது சாட்டப்பட்ட மதுபான ஊழல் முறைகேடு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
இதனால் தற்போது (பிப்ரவரி 5, 2025) நடைபெற்று முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி கட்சிக்கு சற்று பின்னடைவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை உறுதிப்படுத்துவதுபோல தேர்தலுக்கு பிந்தைய எக்சிட் போல் முடிவுகளும் வெளியாகி வருகின்றன. இதனால், டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சி அமைக்குமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.