பெங்களூரு
இன்று பெங்களூருவில் நடக்கும் யுஜிசி எதிர்ப்பு மாநாட்டில் தமிழகம் உள்ளிட்ட 7 மாநில அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

மத்திய கல்வித்துறை பல்கலைக்கழக மானிய குழு விதிமுறைகளில் செய்த திருத்தத்தில், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமன தேடுதல் குழுவை அமைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படு வதாகவும் மாநில அரசுகளுக்கு பங்கு இல்லை என்ற நிலையில் அந்த விதிமுறைகள் உள்ளன.
தமிழகம், கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், கேரளா மாநில அரசுகள் இதற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) வரைவு விதிமுறைகள் குறித்து விவாதிக்க ஏழு மாநிலங்களைச் சேர்ந்த உயர்கல்வி மந்திரிகள் இன்று பெங்களூருவில் தேசிய அளவிலான கூட்டத்தை நடத்துகின்றனர்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடங்கி வைக்கும் இந்த மாநாட்டில் தமிழகம், கேரளா, தெலுங்கானா, இமாசல பிரதேசம், காஷ்மீர், ஜார்கண்ட் உள்ளிட்ட 7 மாநிலங்களின் உயர்கல்வித்துறை அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த மாநாட்டில் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கலந்து கொள்கிறார்.
கர்நாடக உயர்கல்வித்துறை அமைச்சர் எம்.சி.சுதாகர்,
“துணை வேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை பலப்படுத்த வேண்டியது அவசியம்.
நாட்டின் கல்வித்துறை பாதுகாப்பாக உள்ளது. எந்த மாநில அரசுடனும் கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு விதிமுறைகளை திருத்தி வெளியிட்டுள்ளது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. அதனால் உயர்கல்வி மந்திரிகள் மாநாட்டில் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும்”
என்று தெரிவித்துள்ளார்.