சீனப் பொருட்கள் மீதான வரியை உயர்த்த அமெரிக்கா உத்தரவிட்ட சில மணி நேரங்களில் அதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதியை சீனா உயர்த்தியுள்ளது.

அமெரிக்கா விதித்துள்ள வரிவிதிப்பு இன்று (பிப். 4) காலை 10:30 மணிமுதல் (இந்திய நேரப்படி) அமலுக்கு வந்துள்ள நிலையில் சீனா வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் வரியை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த பரஸ்பர வரிவிதிப்பை அடுத்து உலகின் முதல் இரண்டு பொருளாதார நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போர் மீண்டும் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவிற்குள் சட்டவிரோத போதைப்பொருள் விநியோகத்தை தடுக்க பெய்ஜிங் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று டிரம்ப் பலமுறை எச்சரித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்குள் சீனா இறக்குமதி செய்யும் அனைத்துப் பொருட்களுக்கும் கூடுதலாக 10 சதவீத வரி அமலுக்கு வந்தது.

இதையடுத்து, அமெரிக்க நிலக்கரி மற்றும் எல்என்ஜிக்கு 15 சதவீதமும், கச்சா எண்ணெய், விவசாய உபகரணங்கள் மற்றும் சில ஆட்டோக்களுக்கு 10 சதவீதமும் வரி விதிக்கப்படும் என்று சீனாவின் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஏற்றுமதிகள் மீதான புதிய வரிகள் பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், Alphabet Inc இன் கூகிளில் ஏகபோக எதிர்ப்பு விசாரணையைத் தொடங்குவதாக சீனா கூறியுள்ளது.

அதே நேரத்தில் Calvin Klein உள்ளிட்ட பிராண்டுகளின் ஹோல்டிங் நிறுவனமான PVH Corp மற்றும் அமெரிக்க உயிரி தொழில்நுட்ப நிறுவனமான Illumina இரண்டையும் அதன் “நம்பகமற்ற நிறுவனங்களின் பட்டியலில்” சேர்த்துள்ளது.

சீனாவின் வர்த்தக அமைச்சகமும் அதன் சுங்க நிர்வாகமும், தனித்தனியாக, “தேசிய பாதுகாப்பு நலன்களைப் பாதுகாப்பதற்காக” டங்ஸ்டன், டெல்லூரியம், ருத்தேனியம், மாலிப்டினம் மற்றும் ருத்தேனியம் தொடர்பான பொருட்களின் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிப்பதாகக் கூறியுள்ளது.

பிப்ரவரி 3 அன்று, டிரம்ப், கடைசி நிமிடத்தில் மெக்சிகோ மற்றும் கனடா மீதான 25 சதவீத வரிகள் குறித்த தனது அச்சுறுத்தலை நிறுத்தி வைத்தார், இரு அண்டை நாடுகளுடனான எல்லை மற்றும் குற்ற அமலாக்கத்தில் சலுகைகளுக்கு ஈடாக 30 நாள் இடைநிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டார்.

ஆனால் சீனாவிற்கு அத்தகைய நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை, தவிர, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இவ்வாறு இறுதிவரை பேச வாய்ப்பில்லை என்று வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தியுள்ளது.