மும்பை
நேற்று முதல் மும்பையில் ஆட்டோ மற்றும் டாக்சி கட்டண உயர்வு அமலாகி உள்ளது

பொதுமக்கள் மும்பை யில் மின்சார ரயில், பெஸ்ட் பஸ்களுக்கு பிறகு ஆட்டோ, டாக்சிகளை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மும்பையில், சுமார் 5 லட்சம் ஆட்டோக்கள், 1 லட்சத்து 75 ஆயிரம் டாக்சிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில். ஆட்டோவில் முதல் 1½ கி.மீ பயணம் செய்ய ரூ.23-ம், டாக்சிக்கு ரூ.28-ம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஆட்டோ, டாக்சி சங்கத்தினர் சி.என்.ஜி விலை உயர்வு, வாகன பராமரிப்பு, காப்பீடு செலவு, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என அரசை வலியுறுத்தி வந்தனர். எனவே மும்பை பெருநகர மண்டல போக்குவரத்து ஆணையம் ரூ.3 கட்டணம் உயர்த்தி அனுமதி அளித்தது.
நேற்று முதல் ஆட்டோ, டாக்சிகளின் கட்டணம் ரூ.3 உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்தது. அதன்படி குறைந்தபட்ச கட்டணமாக ஆட்டோவிற்கு ரூ.26, டாக்சிகளில் ரூ.31 ஆக உயர்ந்துள்ளது. நீலம், சில்வர் ஏ.சி டாக்சி கட்டணம் ரூ.40-ல் இருந்து ரூ.48 ஆக உயர்ந்துள்ளது.
இந்த புதிய கட்டணத்திற்கு ஏற்ப மீட்டரில் மாற்றங்களை செய்த பிறகு ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் புதிய கட்டணத்தை பயணிகளிடம் இருந்து வசூலிக்க முடியும் என ஆணையம் தெரிவித்து உள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் 14.95 சதவீத கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.