புனே
புனேவில் இதுவரை ஜி பி எஸ் தொற்றால் 5 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

ஜி.பி.எஸ். என அழைக்கப்படும் ‘கிலான் பாரே சின்ட்ரோம்’ நோய் தொற்று மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை சுமார் 140 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி 26 ஆம் தேதி புனேவுக்கு வந்த 40 வயதான நபர் ஜி.பி.எஸ். நோயால் பாதிக்கப்பட்டு சோலாப்பூரில் உயிரிழந்தார்.
மேலும் கடந்த 29ம் தேதி புனேயில் 56 வயதான பெண் ஒருவர் ஜி.பி.எஸ். பாதிப்பால் உயிரிழந்தார்.
தவிர 36 வயதுடைய டாக்சி டிரைவர் கடந்த 21-ம் தேதி நிமோனியா, சுவாசப்பிரச்சினை காரணமாக புனேயில் உள்ள யஷ்வந்த் ராவ் சவான் நினைவு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் செய்த சோதனையில் அவர் ஜி.பி.எஸ். நோயால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த 30 ஆம் தேதி ஜி.பி.எஸ். நோயால் பாதிக்கப்பட்ட 60 வயதுடைய நபர் உயிரிழந்தார். கடந்த 27 ஆம் தேதி சிங்காட் சாலையில் உள்ள தாயாரி பகுதியைச் சேர்ந்த அவர் அன்று தளர்வான இயக்கங்கள் மற்றும் கீழ் மூட்டுகளில் பலவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
வார்ஜே மால்வாடியைச் சேர்ந்த 60 வயதான நபருக்கு ஜிபிஎஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுவரை ஜி.பி.எஸ். பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.