டெல்லி: குடியரசு தலைவர் குறித்து சோனியா காந்தி விமர்சனம் செய்துள்ளதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில்,  குடியரசு தலைவர் மாளிகை விளக்கம் வெளியிட்டுள்ளது.

சோனியா காந்தியின் கருத்து ‘மோசமான ரசனை கொண்ட கருத்துகள், உயர் பதவியின் கண்ணியத்தை புண்படுத்துகின்றன’  என ராஷ்டிரபதி பவன் கண்டனம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் இன்று உரையாற்றிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சோர்வடைந்து விட்டார், அவரால் பேச முடியவில்லை என காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி  விமர்சனம் செய்தது  சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  தற்போது 78 வயதாகும் சோனியா காந்தி வயது முதிர்வு காரணமாக கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கிய நிலையில், குடியரசு தலைவர் குறித்து விமர்சனம் செய்தது பேசும்பொருளாக மாறியது.

சோனியா காந்தியின் பேச்சு கடும்  கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. இந்த நிலையில், சோனியா காந்தி விமர்சனத்துக்கு  குடியரசு தலைவர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று  குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இதில் பங்கேற்ற பின் வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, குடியரசு தலைவர் உரையின் இறுதியில் மிகவும் சோர்வடைந்து விட்டார் எனவும் “அவரால் பேச முடியவில்லை, பார்ப்பதற்கு மிகவும் பரிதாபகரமாக இருந்தது” என தெரிவித்தார்.

இந்த கருத்து சர்ச்சையான நிலையில், பாஜக இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசு தலைவரை சோனியா காந்தி அவமதித்துள்ளதாக தெரிவிதுள்ள மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, காங்கிரஸ் கட்சி பழங்குடியின மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு குடியரசு தலைவர் மாளிகை விளக்கமளித்துள்ளது, அதில், நாடாளுமன்றத்தில்  குடியரசுத் தலைவரின் உரை குறித்து காங்கிரஸ் கட்சியின் சில முக்கிய தலைவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், உயர் பதவியின் கண்ணியத்தை புண்படுத்தும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

அவை ஏற்றுக்கொள்ள முடியாதவை. உரையின் முடிவில் குடியரசுத் தலைவர் மிகவும் சோர்வடைந்து விட்டதாகவும், அவரால் பேச முடிய வில்லை என்றும் அந்தத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்த உண்மையைத் தெளிவுபடுத்த குடியரசுத் தலைவர் மாளிகை விரும்புகிறது. குடியரசுத் தலைவர் எந்த நிலையிலும் சோர்வடைய வில்லை. உண்மையில், அவர் தமது உரையின் போது எந்தத் தருணத்திலும் சோர்வடையவில்லை.

விளிம்புநிலை சமூகங்களுக்காகவும், பெண்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் பேசுவதில் ஒருபோதும் சோர்வடைவதில்லை என்பதை அவர் உறுதியாக நம்புகிறார். இந்தத் தலைவர்கள் இந்தி போன்ற இந்திய மொழிகளில் உள்ள மரபுத் தொடர்களையும் சொல்லாடல் முறையையும் அறிந்திருக்கவில்லை. அதனால்  தவறான எண்ணம் உருவாகியிருக்கலாம் என்று குடியரசுத் தலைவர் அலுவலகம் நம்புகிறது. எவ்வாறாயினும், இத்தகைய கருத்துக்கள் மோசமானதாக உள்ளன. இவை துரதிர்ஷ்டவசமானவை என்பதுடன் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியவை என  தெரிவிக்கப்பட்டுள்ளது.