டெல்லி
டெல்லியில் உள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

வருகிற 5-ந்தேதி டெல்லியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால் பஞ்சாப் மாநில பதிவெண் கொண்ட ஒரு காரில் இருந்து நேற்று முன்தினம் பணம் மற்றும் பொருட்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர். தற்போது பஞ்சாபிலும் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது.
எனவே டெல்லியில் உள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் வீட்டில் நேற்று தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் எந்த பொருட்களும் சிக்கவில்லை என தெரிகிறது. இந்த சோதனை தொடர்பாக தேர்தல் அதிகாரிகளுக்கு ஆம் ஆத்மி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் சிங் மான் இது குறித்து
”டெல்லிக்குள் பாஜக.,வினர் வெளிப்படையாக பணம் விநியோகம் செய்கிறார்கள். ஆனால் டெல்லி போலீசாரும், தேர்தல் கமிஷன் அதிகாரிகளும் எதையும் கண்டுகொள்வதில்லை.
இதற்கெல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. பாஜக.,வின் உத்தரவின் பேரில் டெல்லியில் உள்ள எனது இல்லத்தில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்”
எனக் கூறியுள்ளார்.