சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி மக்களை கொட்டகைகளில் அடைத்து வைப்பது ஏன்?  என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம் அதுகுறித்து தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், அப்பகுதி மக்கள் தனியார் மண்டபங்கள் கொட்டகைகளில் அடைத்து வைக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும், ஓட்டு ஒன்றுக்கு திமுக தரப்பில்  ரூ.1500  கொடுக்கப்படுவதாக,  சுயேச்சை வேட்பாளர் சென்னை வந்து தமிழக தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில்,  வாக்காளர்கள் தனியார் கொட்டகைகளில் அடைத்து வைக்கப்படுகின்றனர் என  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி,  வாக்காளர்களை செல்வாக்கான கட்சிகள் கொட்டகையில் தங்க வைப்பது குறித்து கேள்வி எழுப்பியதுடன், இதுகுறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க  உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இரந்த  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானதை அடுத்து, அந்த தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.  அங்கு இருமுனை போட்டி நிலவுகிறது. அதன்படி, திமுகவும், நாம் தமிழர் கட்சி மட்டுமே போட்டியிடுகிறது. அத்துடன் ஏராளமான சுயேச்சை வேட்பாளர்களும் களமிறங்கி உள்ளனர்.

இநத் நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களை கொட்டகைகளில் அடைத்து வைப்பதை தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி கொங்குதேச மறுமலர்ச்சி மக்கள் கட்சியைச் சேர்ந்த கே.பி.எம்.ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், தொகுதியின் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமகன் ஈ.வெ.ரா மரணத்தை தொடர்ந்து 2023ம் ஆண்டு இடைத்தேர்தல் நடத்தப்பட்ட தாகவும், இந்த தேர்தலில் போட்டியிட்ட ஆளும் கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்யவும், மற்ற வேட்பாளர்கள் வாக்காளர்களை அணுகுவதை தடுக்கவும் ஒவ்வொரு வார்டிலும் கொட்டகைகளை அமைத்து, அதில் வாக்காளர்களை தங்க வைத்ததாகக் கூறியுள்ளார். கொட்டகைகளில் தங்க வைக்கப்பட்ட வாக்காளர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டதாகவும், வாக்குக்கு பணம் வழங்கப்பட்டதாகவும், அதனாலேயே அந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

தற்போது நடக்க உள்ள தேர்தலில் கொட்டகை பாணி பின்பற்றக் கூடும் என அச்சம் தெரிவித்துள்ள மனுதாரர், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்ததாக கூறியுள்ளார்.

தனது விண்ணப்பத்தில், தொகுதிக்கு வரும் வெளியாட்களுக்கும், வெளியூர் செல்லும் தொகுதி வாக்காளர்களுக்கும் இ – பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் எனவும் தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க ஆன் லைன் வசதியை ஏற்படுத்த வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்திருந்ததாக மனுவில் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 8 ஆம் தேதி அளித்த தனது விண்ணப்பத்துக்கு பதிலளிக்கவில்லை என்பதால், அதனை பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் அடங்கிய அமர்வு, மக்கள் ஏன் கொட்டகைக்கு செல்ல வேண்டும்? யார் தான் சலுகைகள் வழங்கவில்லை? என கேள்வி எழுப்பி, மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓட்டுக்கு ரூ.1500 பட்டுவாடா! சுயேச்சை வேட்பாளர் புகார்…