ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆளும் கட்சியான திமுக வாக்குக்கு பணம் கொடுத்து வருவதாகவும், ஒரு ஓட்டுக்கு ரூ.1500 வரை கொடுக்கப்படுவதாகவும், சுயேட்ச்சை வேட்பாளர் ஒருவர் பண மாலையுடன் வந்து தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ந்தேதி நடைபெற உள்ளது. இதனால் அங்கு இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த இடைத்தேர்தலை எதிர்க்கட்சிகள் முழுமையாக புறக்கணித்து விட்டதால், திமுகவுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. மேலும் 44 சுயேச்சைகளும் போட்டியிடுகின்றனர். இதன் காரணமாக மொத்தம் 46 பேர் களத்தில் உள்ளனர்.
இந்த தேர்தலில் எப்போதும் போல, சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அத்துடன் அகில இந்திய ஊழல் கூட்டமைப்பின் தேசிய தலைவர் அக்னி ஆழ்வார், நூர் முகமது என பலர் களமிறங்கி உள்ளனர்.
இந்த நிலையில், அகில இந்திய ஊழல் கூட்டமைப்பின் தேசிய தலைவர் , அக்னி ஆழ்வார், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி, கழுத்தில் ரூபாய் நோட்டு மாலையுடன் ( 50 ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய்களை கொண்ட நோட்டுகளை மாலை) தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கைச் சந்தித்து புகார் அளிக்க வந்திருந்தார்.
அவரை காவல்துறையினர் அனுமதிக்க மறுத்த நிலையில், பண மாலையைக் கழட்டி வைத்து விட்டு, தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் கொடுத்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்னி ஆழ்வார், “அகில இந்திய ஊழல் கூட்டமைப்பின் தேசிய தலைவர் நான். ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க., வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து வருவதை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும். வாக்காளர்களுக்கு 1,500 ரூபாய் வரை பணப் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது,” என்று தெரிவித்தார்.
மேலும், மக்கள் பணம் வாங்காமல் ஜனநாயக முறையில் வாக்களிக்க வேண்டும். ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக பல முறை தேர்தல் அலுவலர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தலில் நின்றால் கூட, மக்களுக்கு பணம் கொடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற சூழல் தமிழ்நாட்டில் உருவாகியிருப்பதாக குற்றம் சாட்டியவர், தொடர்ந்து பேசியவர், 2011 திருவாரூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டதாகவும்,, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவையும் எதிர்த்து போட்டியிட்டுள்ளதாகக் கூறினார்.
ஈரோடு கிழக்கு தேர்தல் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்தும் வகையில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்என்றும் வலியுறுத்தினார்.