சென்னை:   தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரூ.206.63 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி,  2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களை வழங்க போக்குவரத்துக்கழகங்களுக்கு ரூ.206 கோடியை தமிழக அரசு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெறுவோருக்கு, ஒய்வு பெறும் நாளில் இருந்து அவர்களுக்கான ஓய்வூதியம் உள்ளிட்டபலன்கள் வழங்கப்படுவதில்லை என்று போக்குவரத்து கழகங்களின் தொழிற்சங்கங்கள் சார்பில் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. ஏற்கனவே பலமுறை போராட்டம் நடத்தி வந்துள்ள நிலையில், விரைவில், தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன. இதையடுத்து,  அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரூ.206.63 கோடி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அரசு உத்தரவில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழகங்களில் பணியாற்றி 2022ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2023ஆம் ஆண்டு மார்ச் வரை ஓய்வு பெற்றோர், தானாக விரும்பி ஓய்வு பெற்றோர் உள்ளிட்டோருக்கான ஊதியம் உள்ளிட்ட பணபலன்களை வழங்குவதற்கு தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதிக்கழகத்துக்கு கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமும், கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதமும் இரண்டு தவணைகளாக ரூ.404 கோடி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம், சென்னை மாநகரப்போக்கு வரத்துக்கழகம், கும்பகோணம் போக்குவரத்துக்கழகம் உள்ளிட்ட 8 போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற, தானாக ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பணபலன்களை வழங்க ரூ.206.63 கோடி ரூபாய் வழங்கும்படி தமிழ்நாடு அரசுக்கு போக்குவரத்துறை யின் தலைவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

போக்குவரத்துறையின் தலைவரின் கோரிக்கையை கவனமாக பரிசீலித்த அரசு ரூ.206.63 கோடியை வழங்கி கடந்த 10ஆம் தேதியிட்ட அரசாணையில் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம், தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் அரசு போக்குவரத்துக்கழகம், கோவை அரசு போக்குவரத்துக்கழகம், கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகம், மதுரை போக்குவரத்துக்கழகம், திருநெல்வேலி போக்குவரத்துக்கழகம் ஆகியவற்றுக்கு மொத்தம் ரூ.206.63 கோடி வழங்கி உத்தரவிடப்பட்டு உள்ளது,”எனக் கூறப்பட்டுள்ளது.

இதன்படி 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை 8 மாதங்களுக்களில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்கள் தர வேண்டி உள்ளது.

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ரூ. 625 சாதனை ஊக்கத்தொகை! அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு