தென் கொரியாவில் கடந்த டிசம்பர் 29ம் தேதி நடைபெற்ற மிகவும் மோசமான விமான விபத்தில் 179 பேர் பலியானார்கள்.
இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜெஜூ ஏர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-800 விமானம் விபத்துக்குள்ளானது குறித்து போயிங், ஜெஜூ நிறுவனம் தவிர தென் கொரிய அரசின் புலனாய்வு அமைப்பு ஆகியவை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதில், தரையிறங்கும் போது லேண்டிங் கியர் பயன்படுத்தாது ஏன் ? என்பது குறித்தும் விமானம் தரையிறங்குவதற்கு நான்கு நிமிடங்கள் முன்னதாக விமானத் தரவுப் பதிவுக் கருவிகள் பதிவு செய்வதை நிறுத்தியது ஏன் ? என்பது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த விபத்து குறித்து தென் கொரிய அதிகாரிகள் 6 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இதில், பைக்கல் டீல்ஸ் எனும் ஒருவகை புலம் பெயர் வாத்துக்களின் மரபணு விமானத்தின் இரண்டு இயந்திரங்களில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
குளிர்காலத்தில் தென் கொரியாவுக்கு கூட்டம் கூட்டமாக பறந்து வரும் இந்த வகை வாத்தின் எச்சம் விமானத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில் இது குறித்து மேலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.