புதுக்கோட்டை:   வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள  குற்றப்பத்திரிகையை எதிர்த்து, குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் தரப்பில்  மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

வேங்கைவயல் விவகாரத்தில்,  இரண்டு ஆண்டுகளை கடந்தும், குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் சிபிசிஐடி போலீசார்,  வேங்கைவயல்  பகுதி மக்கள் 3 பேர் மீது குற்றம் சாட்டி தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த  நிலையில்,  வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் மூவர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

மிழ்நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய வேங்கை வயல் விவகாரம் நடைபெற்று  இரண்டு ஆண்டுகளை கடந்த  நிலையில், இந்த விவகாரத்தில் எந்தவொரு மேல்நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது, அந்த  மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  இதை அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. மேலும், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், திடீரென வேங்கை வயல் விவகாரம் குறித்து சிறப்பு நீதிமன்றத்தில், அந்த பகுதியைச் சேர்ந்த 3 பேர் குற்றவாளிகள் என சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. திமுக கூட்டணி கட்சிகளே சிபிசிஐடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

இந்த நிலையில், குற்றப்பத்திரிகை குறித்து  சிபிசிஐடி  தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில்,    வேங்கைவயலில் குடிநீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது தொடர்பான வழக்கின் விசாணையின்போது, புகார்தாரர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 397 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

196 மொபைல் எண்கள், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொலைபேசி எண்களை உள்ளடக்கிய 87 டவர்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டதாகவும், கிராம மக்களிடமிருந்து உயிரியல் மாதிரிகள் எடுத்து டி.என்.ஏ பகுப்பாய்வு செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளது.

வேங்கைவயல் நீர்தேக்க தொட்டி பராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்காக, முத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் முத்தையா, வேங்கைவயல் காவலர் முரளிராஜின் தகப்பனார் ஜீவானந்தத்தை அவமானப்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிபிசிஐடி குறிப்பிட்டுள்ளது. இதற்கு பழி வாங்குவதற்காக, முரளிராஜாவால் இச்செயல் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது புலனாவதாக தெரிவித்து உள்ளது.

முரளிராஜா, சுதர்ஷன், முத்தையா, முத்துக்கிருஷ்ணன் மற்றும் பலரின் கைப்பேசிகள் தடயவியல் பகுப்பாய்வு செய்யப்பட்டதாகவும், அதில் அழிக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் உரையாடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள், தடயவியல் அறிக்கை, சாட்சியங்களின் அறிக்கை, வல்லுநர்களின் கருத்துகள் ஆகியற்றை பகுப்பாய்வு செய்தபின்னர் விசாரணை முடிக்கப்பட்டு, முரளிராஜா, சுதர்ஷன், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் மீது புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக, சிபிசிஐடி தனது விளக்கத்தில் கூறியுள்ளது.

“வேங்கைவயல் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்”! திமுக கூட்டணி கட்சிகள் போர்க்கொடி…

சாதிய வன்கொடுமை வடுவாகவே மாறிப்போன வேங்கை வயல் விவகாரம்! இரண்டு ஆண்டுகளாகியும் மவுனம் காக்கும் திமுக அரசு….