சென்னை: சீமான் வீட்டை முற்றுகையிடச் சென்றவர்கள் அத்துமீறி வீட்டிற்குள்ளே வந்தால், அவர்களை தாக்க தயாராக, நாம் தமிழர் கட்சியினர் உருட்டு கட்டைகளை கைகளில் வைத்திருந்தது தொடர்பாக, காவல்துறை வழக்குபதிவு செய்துள்ளது.

பெரியார் விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் வீட்டை முற்றுகையிட பெரியார் அமைப்புகள் வந்த நிலையில், அதை எதிர்கொள்ள நாம் தமிழர் கட்சியினரும் அங்கே குவிந்தனர். ஏராளமானோர் சீமான் வீட்டிற்குள் பாதுகாப்பாக நின்றிருந்தனர். அவர்களின் பலரது கைகளில் உருட்டு கட்டைகள், கரும்புகள் போன்றவை காணப்பட்டது.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட தங்களை தாக்க உருட்டுக்கட்டைகளுடன் நாம் தமிழர் கட்சியினர் 150 பேர் நின்றிருந்தாக பெரியாரிய அமைப்புகள் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் சீமான் உள்ளிட்ட 181 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் நீலாங்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு சமூக வலைதளங்களில் வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. ஆனால், ஆளும் திமுக அரசின் ஆதரவுடன் பெரியார் அமைப்புகள் சீமான் மீது மாவட்டந்தோறும் புகார் கொடுத்துள்ளதுடன், அவரது வீட்டை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதாவது, தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே 17 இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஜனவரி 22ந்தேதி அன்று நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். அப்போது காவல்துறையினரின் தடுப்பை மீறி உள்ளே செல்ல முயன்றனர். பின்னர் அவர்களை காவல்துறையினர் கைது செய்து, அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
இதற்கிடையில், சீமான் வீட்டின் பாதுகாப்பாக, , நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் சீமான் வீட்டில் முன்தினம் இரவு முதலே குவிந்தனர். அவர்களுக்கு தேவையான உணவுகள் கொடுக்கப்பட்டது. சுமார் 150 நாதக தொண்டர்கள் உருட்டுக்கட்டைகளுடன் வீட்டிற்குள் பாதுகப்பு பணியில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெரியார் அமைப்புகள் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளன. புகாரில், வீட்டிற்குள் தடியுடன் இருந்த சீமான் கட்சியினர் எங்களை தாக்கும் நோக்கில் தான் உருட்டுக்கட்டைகளுடன் இருந்தனர் என தெரிவித்துள்ளன.
இந்த புகாரின் பேரில் சீமான் உள்ளிட்ட 181 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் நீலாங்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.