ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 46 பேர் போட்டியிடுகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி உடல் நலக்குறைவால் திடீரென இறந்தார். இதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பிப்ரவரி மாதம் 5-ந்தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிப்ரவரி 8ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை ஜனவரி 7ந்தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
இதைத்தொடர்ந்து, வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. அதன்படி, கடந்த 10-ம் தேதி முதல் 17-ந்தேதி வரை இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த தேர்தலை அதிமுக கூட்டணி மற்றும் பாக, தவெக கட்சிகள் புறக்கணித்த நிலையில், திமுகவும், நாம் தமிழர் கட்சி மட்டுமே களமிறங்கி உள்ளன. தி.மு.க வேட்பாளராக, வி.சி.சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதா லட்சுமியும் களத்தில் உள்ளனர். இரு கட்சிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் மொத்தம் 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்ததில் 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு தி.மு.க, நாம் தமிழர் கட்சி, சுயேட்சை என 55 மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று (ஜனவரி 20ந்தேதி) வேட்பு மனுக்கள் வாபஸ் பெறும் நாளாகும். அதன்படி, வேட்புமனுக்களை வாபஸ் பெற நேற்று மதியம் 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் முடிந்தவுடன் மொத்தம் 47 பேர் போட்டியிடுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தமாக 46 பேர் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்பாளர் பட்டியலில் இருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் பத்மாவதி என்ற வேட்பாளரின் பெயரை நீக்கி இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதனால் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 47-ல் இருந்து 46 ஆக குறைந்துள்ளது.