சென்னை: தமிழ்நாட்டு விரைவு போக்குவரத்து கழகத்தில் இயக்கப்பட்டு வரும் 4 சிஎன்ஜி பேருந்துகளால், மாதம் ரூ.3 லட்சம் சேமிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி மற்றும் எல்என்ஜி (திரவ இயற்கை எரிவாயு) எனப்படும் இயற்கை எரிவாயு மூலம் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதன் தொடா்ச்சியாக சிஎன்ஜி மூலம் இயங்கும் வகையில் பேருந்துகள் மாற்றியமைக்கப்பட்டன. அதன்படி, நவ.12-ஆம் தேதி சோதனை அடிப்படையில் சென்னை-திருச்சி வழித்தடத்தில் சிஎன்ஜி-யாக மாற்றம் செய்யப்பட்ட விரைவு பேருந்து இயக்கப்பட்டது.
தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் கடந்த 2024ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் சூழலுக்கு உகந்த வகையில் டீசலுக்கு மாற்றாக சி.என்.ஜி (CNG), எல்.என்.ஜி (LNG) மூலம் இயங்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தற்போது 7 போக்குவரத்துக் கழகங்களில் தலா 2 பேருந்துகள் வீதம் 14 பேருந்துகள் சிஎன்ஜி மூலம் இயக்கப்படுகின்றன. தற்போது மதுரை, சேலம், கும்பகோணம் போக்குவரத்துக் கழகங்களில் தலா 2 வீதம் 6 சிஎன்ஜி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக தொலைதூரம் பயணம் மேற்கொள்ளும் பேருந்துகளில் முதல் முறையாக, டீசல் எரிபொருளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த சுருக்கப்பட்ட இயற்கை எரிவாய்வு (CNG) பயன்படுத்தி, மறுசீரமைப்பு செய்த பேருந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேருந்து திருச்சி – சென்னை வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. தொடர்ந்து, கோவை, திருநெல்வேலி, விழுப்புரம் போக்குவரத்து கழகங்களிலும் சோதனை அடிப்படையில் சிஎன்ஜி பேருந்துகள் இயக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், எவ்வித சிக்கலும் எழாத நிலையில், ஓட்டுநா், நடத்துநரும் இதற்கு ஆதரவான கருத்துகளை முன்வைத்ததைத் தொடா்ந்து, சென்னை -சேலம் வழித்தடத்திலும் சிஎன்ஜி விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்போதைய நிலவரப்படி விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 4 பேருந்துகள் சிஎன்ஜி தொழில்நுட்பத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு எரிபொருளுக்கான செலவு சேமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அதாவது, சிஎன்ஜி (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) தொழில்நுட்பத்தில் இயங்கும் பேருந்துகளால் மாதம் ரூ.3 லட்சம் சேமிக்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழக உயரதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விரைவு போக்குவரத்துக் கழக உயா் அதிகாரிகள் , பி.எஸ் 4 வகை டீசல் பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்றுவதன் மூலம் எரிபொருள் சேமிப்பு என்பதுடன், பராமரிப்புச் செலவு, இயக்கச் செலவு ஆகியன வெகுவாக குறைகிறது. இந்தப் பேருந்துகளை சோதனை முறையில் மாற்றியமைப்பதற்கு எரிவாயு நிறுவனங்களும் தங்கள் பங்களிப்பை கொடுக்கின்றன.
திருச்சிக்கு இயக்கப்படும் பேருந்தை ஐஆா்எம் என்ற நிறுவனமும், சேலத்துக்கு இயக்கப்படும் பேருந்தை இந்தியன் ஆயில் நிறுவனமும் சிஎன்ஜி-யாக மாற்றியமைத்துள்ளன. இவ்வகை பேருந்துகள் மூலம் ஒரு கி.மீ.-க்கு ரூ.3 முதல் 4 வரை மிச்சமாகிறது. அதன்படி, ஒரு பேருந்துக்கு ஒரு மாதத்துக்கு ரூ.75 ஆயிரம் மிச்சமாகிறது.
4 பேருந்துகளுக்கும் சோ்த்து ரூ.3 லட்சம் வரை விரைவு போக்குவரத்துக் கழகத்தால் சேமிக்க முடிகிறது. தற்போது சோதனை முறையில் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், இது தொடா்பான அறிக்கை அரசிடம் சமா்ப்பிக்கப்படும். தொடா்ந்து, அரசு பரிசீலித்து, திட்டத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மேலும் சில பேருந்துகள் சிஎன்ஜி-யால் இயங்கும் வகையில் மாற்றம் செய்யப்படும் என்றனா்.
பொதுவாக மாநகரப் பேருந்துகள் ஒரு லிட்டர் டீசலில் 4.76 கி.மீ வரைச் செல்லும். இதனைக் கணக்கிட்டால் ஒரு கிலோ மீட்டருக்கு 19.03 ரூபாய் செலவு. இதுவே, சி.என்.ஜி பேருந்தை இயக்கினால் ஒரு கிலோமீட்டருக்கான செலவு 18.47 ரூபாய் ஆகிறது. இது நகரம், புறநகரில் மட்டும் ஓடும் சென்னை மாநகரப் பேருந்துகளின் கணக்கு. மற்ற போக்குவரத்து கழகங்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்துகளை செலுத்தும்போது, ஒரு கிலோமீட்டருக்கு டீசல் என்றால் 15.80 ரூபாயும் (மைலேஜ் காரணமாக செலவு குறைகிறது) சி.என்.ஜி என்றால் 11.24 ரூபாயும் செலவாகும். ஒவ்வொரு கோட்டத்துக்கும் ஏற்றபடி இதன் சேமிப்புத் தொகை மாறுபடும்.
சேலத்தில் சி.என்.ஜி மூலம் சேமிக்கப்பட்ட தொகை ரூ.2.08 லட்சம். இதேப்போல திருநெல்வேலி, கும்பகோணம், மதுரை, கோவை, விழுப்புரம் கோட்டங்களில் முறையே ரூ.1.58 லட்சம், ரூ.1.25 லட்சம், ரூ.1.58 லட்சம், ரூ.46,690, ரூ.68,064 என ஒரு மாதத்தில் மொத்தமாக ரூ.7.65 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளது.
சோதனைமுறை ஓட்டத்திலே நல்ல பலன் தென்பட்டிருக்கிறது. இதனை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சிகளையும் விரைவில் எதிர்பார்க்கலாம்.