சென்னை: துணைவேந்தர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ரவி மீது தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணை எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுக்களுக்கான விசாரணையை உச்சநீதிமன்றம் ஏற்றது. இதற்கான இறுதி விசாரணை அடுத்த வாரம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி காலம் தாழ்த்துவதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில், துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி குறுக்கீடு தொடர்பாக புதிய கூடுதல் மனுவையும், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது.
அதனடிப்படையில், சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 6 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு குழு அமைத்திருந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் ஆளுநரின் குறுக்கீடு அதிகமாக இருப்பதாக தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டியது.
குறிப்பாக, ஆளுநர் தரப்பில் இருந்தும் ஒரு குழு அமைத்து உத்தரவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை அடுத்த வாரம் நடைபெறும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா தெரிவித்துள்ளார்.
துணை வேந்தர் நியமன விவகாரம்: தமிழக அரசு மீது ஆளுநர் மீண்டும் குற்றச்சாட்டு