சென்னை: ‘அ.தி.மு.க., சார்பில்,கழக நிறுவனத் தலைவர், ‘பாரத் ரத்னா’ இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 108-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்படும் என்றும், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் நடத்தப்படும்’ என, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அதிமுக தலைமைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், அதிமுக நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாளான வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி, கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்க உள்ளார்.
அதனைத்தொடர்ந்து, தலைமைக் கழக செயலாளர்கள் மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தங்கள் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்தும், ஆங்காங்கே அவரது உருவப்படத்தை வைத்தும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அதேபோல், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் எம்.ஜி.ஆர். சிலைகள், படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மற்றொரு அறிக்கையில், அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆரின் 108வது பிறந்த நாளையொட்டி, நாளை மறுதினம் முதல் 22ம் தேதி வரை, பிப்., 12 முதல் 14ம் தேதி வரை, அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் பொதுக்கூட்டம் நடக்கும். கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டம் நடக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.
கூட்டம் நடக்கும் இடம், அதில் பங்கேற்க உள்ள சிறப்பு பேச்சாளர்கள் விபரத்தை, கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாளை மறுதினம், செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பங்கேற்று பேச உள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல், பிப்., 5ல் நடக்க உள்ளதால், அந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம், பிப்., 12, 13, 14ம் தேதிகளில் நடக்கும். கூட்டத்தில், கட்சியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.