சென்னை: அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது. இது அதிமுகவினரிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் 2011-2016 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். அப்போது, சென்னை பெருங்களத்தூரில் ஸ்ரீராம் குழுமத்திடமிருந்து அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமான அனுமதிக்காக ரூ.27.9 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், ஊழல் தடுப்புப்பிரிவினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். அதைத்தொடர்ந்து அமலாக்கத்துறையினரும் சட்டவிரோத பணிப்பரிமாற்ற வழக்கில்,  வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில்  தற்போது அவருக்கு தொடர்புடைய ரூ.100 கோடி மதிப்பிலான இரண்டு அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியிருப்பது குறித்து அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சட்டவிரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், வைத்திலிங்கத்துக்கு தொடா்புடைய 7 இடங்களில் அமலாக்கத்துறையினா் சோதனை நடத்தி,பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் சொத்துகளை முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் 2014- 2015 ஆம் ஆண்டு காலத்தில் பெங்களத்தூர் பகுதியில் ஸ்ரீராம் குழுமத்தின் ஸ்ரீராம் ப்ராப்பர்டீஸ் அண்ட் இன்பராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிட்டட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான 57 ஏக்கர் நிலத்தில், 24 பிளாக்குகள், 1543 வீடுகள் கொண்ட உயர்மட்ட கட்டுமானம் அமைக்க திட்டமிட்டப்பட்டது. இதற்கு 2013 ஆம் ஆண்டில் சிஎம்டிஏவில் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் இதற்கான அனுமதியானது 2 ஆண்டுகளாக கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில் தான் இதற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக தான் ஸ்ரீராம் குழும நிறுவனத்திடம் இருந்து ரூ.27 கோடியை அப்போது அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் பெற்றதாக அறப்போர் இயக்கும் தகுந்த ஆதாரத்துடன் புகார் செய்திருந்தது. ரூ.27 கோடி ரூபாயும் ஒரே காலக்கட்டத்தில் கைமாறி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து தான் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் முதல் குற்றவாளியாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பெயரும், இரண்டாம் குற்றவாளியாக ஸ்ரீராம் ப்ராப்பர்டீஸ் அண்ட் இன்பராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிட்டட் இயக்குனரான ரமேஷ் என்பவரும், மூன்றாம் மற்றும் 4 ஆம் குற்றவாளியாக வைத்திலிங்கத்தின் 2 மகன்கள் பிரபு மற்றும் சண்முக பிரபு பெயர்களும் என மொத்தம் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தற்போது ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.