சென்னை: சென்னையில்  நேற்று நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.  வரும்  15ந்தேதி (மாட்டுப்பொங்கல்) அன்று தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு இலங்கைக் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால்,.  இன்றும், தைப் பொங்கல் திருநாளான நாளையும் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  கிழக்கு இலங்கைக் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஜன.13, 14-ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜன.15-ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அதன்படி,  நாளை மறுதினம், மாட்டுப் பொங்கல் அன்று, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமானது முதல்  கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.

ஜன.16,17-ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜன.18-ஆம் தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் சென்னையில் இன்று மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே சென்னையில் நள்ளிரவில் திடீரென மழை பெய்தது. சென்னையின் பிரதான பகுதிகளான அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், அரும்பாக்கம், வள்ளுவர் கோட்டம், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, திருவல்லிக்கேணி,  சாந்தோம், ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், ராயப்பேட்டை, கிண்டி, ஆலந்தூர், அடையாறு, கோயம்பேடு, செங்குன்றம், மாதவரம், திருவொற்றியூர், ஆவடி, திருவள்ளுர் என பல பகுதிகளில் கனமழை பய்தது.  அதைத்தொடர்ந்து, தற்போது வரை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.  வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.