லக்னோ
ரயில்வே துறையில் மகா கும்ப மேளவுக்காக ரூ. 5000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 13 ஆம் தேதி(இன்று) தொடங்கி பிப்ரவரி 26 ஆம் தேதி வரை 45 நாட்கள் உலகின் மிகப்பெரிய ஆன்மிக, கலாசார மற்றும் மத நிகழ்வுகளில் ஒன்றாக விளங்கும் ‘மகா கும்பமேளா’ நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொள்வதற்காக வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்திர பிரதேச அரசு மகா கும்பமேளாவிற்கான ஏற்பாடுகளை மத்திய அரசுடன் இணைந்து மேற்கொண்டுள்ளது. விழா நட்க்கும் பிரயாக்ராஜ் நகருக்கு சாலை, ரெயில் மற்றும் விமானம் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் வந்து சேர்வதற்கான போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன
பக்தர்களின் வசதிக்காக 40 புதிய மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்தமகா கும்பமேளாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் ரூ.1,296 கட்டணத்தில் ஹெலிகாப்டர் சவாரி மேற்கொள்ளும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம்,
“மகா கும்பமேளாவிற்காக கடந்த 3 ஆண்டுகளாக ரயில்வே துறையில் சுமார் ரூ.5,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகத்தில் ஏற்கனவே இருக்கும் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், புதிய கட்டமைப்புகளை உருவாக்கவும் இந்த தொகை செலவிடப்பட்டது.
மகா கும்பமேளாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்காக புதிய ரெயில்வே வழித்தடங்கள், புதிய நடைமேடைகள் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளன. கங்கை நதியில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது”
என்று தெரிவித்துள்ளார்.