சென்னை: தமிழக சட்டப்பேரவையின் புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
நடப்பாண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி 6-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கியது. வழக்கமாக தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது மரபாக இருந்து வரும் நிலையில், இந்த ஆண்டும் ஆளுநர் அவைக்கு வருகை தந்தார். ஆனால், அவையில், தேசியகீதம் இசைக்கப்படவில்லை என கூறி, அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அத்துடன் சபை ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர், அடுத்த நாளான ஜனவரி 7ந்தேதி, மறைந்த சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் மறைவு குறித்து இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. அதன்படி, மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவுக்கும், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கும் இரங்கல் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. அத்துட்ன அன்றைய பேரவை நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
அதைத்தொடர்ந்து ஜனவரி 8ந்தேதி முதல் 11ம் ந்தேததிவரை சட்டசபையில் வினாக்கள்-விடைகள் நேரத்தில் சட்டசபை உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பு மசோதா உள்பட சில மசோதாக்கள் கொண்டு நிறைவேற்றப்பட்டது. பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை மற்றும் தண்டனையை அதிகரிக்கும் 2 சட்ட மசோதாக்கள் மீது எம்.எல்.ஏ.க்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில் தமிழக சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.