சென்னை: தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த குழு அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கு முன் இந்தியா முழுவதும் பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்போது அந்த நிலை முற்றிலுமாக மாறி, மத்திய அரசே ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இந்தியாவின் 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.
அதுபோல, தமிழ்நாட்டிலும் அத்தகைய திட்டத்தை செயல்படுத்தப் போவதாக வாக்குறுதி அளித்துதான் 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சிக்கு வந்தது. அதன்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு நிதியமைச்சர் பேரவையில், புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த குழு அமைக்கப்படும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஆண்டு (2024) இறுதியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த புதிய ஓய்வூதிய திட்டம் 2025ம் ஆண்டு ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வருகிறது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர் ஒருவர், ஓய்வு பெறுவதற்கு முன் 12 மாதங்களில் எடுக்கப்பட்ட சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறுவார். முழு ஓய்வூதியத் தொகையைப் பெறுவதற்கான தகுதியாக பணி காலம் 25 ஆண்டுகளாக இருக்கும். 25 ஆண்டுகளுக்கு குறைவாக அரசுப் பணியில் இருந்து 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஓய்வூதியத் தொகை விகிதாச்சார அடிப்படையில் கணக்கிடப்படும். தற்போதைய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் பங்களிப்பு 10 சதவீதமும், மத்திய அரசின் பங்களிப்பு 14 சதவீதமும் உள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி மத்திய அரசின் பங்களிப்பு 18 சதவீதமாக உயர்த்தப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில், சுமார் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கேள்வி நேரத்தின்போது, திமுக எம்எல்ஏ எழிலரசன் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் பற்றி கேள்வி எழுப்பினார்.
இதற்க பதில் அளித்து பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு , புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தற்போது மத்திய அரசு அறிவித்திருக்கிறார்கள். இந்த புதிய ஓய்வூதிய திட்டம் அரசு பணியாளர்கள் குறைந்தபட்ச ஓய்வூதிய திட்டத்தை பெறுவதற்கு இது அடிப்படை நோக்கமாகும். இருந்தாலும் இந்த திட்டத்திற்கு உரிய செயலாக்கத்தை, வழிகாட்டுதல்களை, விரிவான செயல்முறைகளை இன்னும் மத்திய அரசு வெளியிடவில்லை. விரைவில் அந்த வழிகாட்டுதலுடன் நெறிமுறைகளும் வெளியிடப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். அது வெளியானவுடன் நம் மாநிலத்தில் தக்கதொரு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஒரு குழுவினை முதலமைச்சர் ஆலோசனை பெற்று அமைத்து அந்த குழுவின் வழிகாட்டுதலின் படி அந்த ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும்.
இவ்வாறு கூறினார்.