சென்னை; பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை மேலும் ஓரு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி பணமோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை, கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ந் தேதி செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். மேலும் சுமார் 470 நாட்களாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜி பலமுறை ஜாமீன் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். எனினும் அவருக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை ஆட்சேபனை தெரிவித்து வந்தது. ஒரு வழியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிபந்தனை ஜாமீன் பெற்று செந்தில் பாலாஜி வெளியே வந்தார். எனினும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் சென்று விசாரணைக்கு ஆஜராகி வருகிறார்.
மீண்டும் திமுகவின் மின்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராகி வருவதுடன் நிதிமன்ற விசாரணைக்கும் ஆஜராகி வருகிறார். இந்த வழக்கின் கடந்த சில மாதங்கள் முன்பு செந்தில் பாலாஜி உள்பட 150 பேருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது. இந்த நிலையில், சமீபத்திய விசாரணையின்போது, செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது அவருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி உள்பட 13 பேர் மீது கூடுதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்து உள்ளது.