சென்னை:  மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் மனு அளிக்க வர முயன்ற பரந்தூர் போராட்டக் குழுவினர், காவல்துறையினரால் கைது செய்யப் பட்டனர்.

பரந்தூர் பசுமை விமான நிலையத்துக்கு எதிராக அந்த பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். அவர்களது போரோட்டம் இன்று 900வது நாளை எட்டி உள்ளது. இதையடுத்து, தங்களது மனுமீது  தமிழக அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில், முதலமைச்சரின் தந்தையான மறைந்த முன்னாள் முதல்வர்  கருணாநிதியின் மெரினாவில் நினைவிடத்தில் மனு அளிக்கப்போவதாக அறிவித்த  ரந்தூர் போராட்டக் குழுவினர், அதற்கான மனுவுடன் சென்னைக்கு கிளம்பினர்.

அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். காஞ்சிபுரம் அருகே பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர் தங்களது 900-வது நாள் போராட்டமாக கருணாநிதியின் நினைவிடத்தில் மனு அளிக்க புறப்பட்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அடைத்து வைக்கப்பட்ட திருமண மண்டபத்தில் தங்களுடன் கொண்டு வந்திருந்த கருணாநிதியின் உருவப்படத்திடம் மனு அளித்தனர்.

சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் பரந்தூர் பகுதியில் அமைகிறது.  தற்போது பயன்பாட்டில் உள்ள சென்னை  மீனம்பாக்கம் விமான நிலையம், பயணிகள் மற்றும் சரக்கு சேவைகளை எதிர்கொள்ள போதுமானதாக இல்லாத நிலையில், சென்னையின்  இரண்டாவது விமான நிலையம்  காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூரில் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.  இதற்காக பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் 5,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.  மேலும், அங்குள்ள நீர் நிலைகள் அகற்றப்பட உள்ளன. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழநாடு அரசு முடுக்கி விட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரத்தை மையமாக வைத்து அப்பகுதி மக்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் இன்று 900 நாளை எட்டி உள்ளது. ஆனால், அவர்களின் போராட்டத்தை தமிழ்நாடு அரசு மட்டுமின்றி தமிழக அரசியல் கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, அங்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  போராட்டக்குழுவினர், இன்று   ஏகனாபுரம் கிராமத்தில் இருந்து புறப்பட்டு கருணாநிதி நினைவிடம் சென்று அவர் நினைவிடத்தில் மனு அளித்துவிட்டு அமைதியாக வருவது என்று முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் அனைவரும் ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை முன்பு கூடினர். அங்கிருந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு பேருந்தில் புறப்பட்டனர். இதை அறிந்த காவல்துறைனிர், போராட்ட குழுவினர் வந்த பேருந்தை, சுங்குவார்சத்திரம்  அடுத்த  கண்ணன்தாங்கல் என்ற கிராமத்தின் அருகே தடுத்து நிறுத்தினார்.

இதையடுத்து இரு தரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, அப்போது போராட்டக் குழுவினர், “நாங்கள் அமைதியான முறையில் மனு அளிக்க செல்கிறோம். எங்களை அனுமதிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.  ஆனால், அதை ஏற்க மறுத்த காவல்துறையினர் கூட்டமாக செல்வதற்கு அனுமதி இல்லை என்று தெரிவித்தனர். முக்கிய நிர்வாகிகள் ஐந்து பேரையாவது அனுமதியுங்கள் நாங்கள் அமைதியாக சென்று மனு அளிக்கிறோம் என்று கூறினர். ஆனால் அதற்கும் போலீஸார் அனுமதிக்கவில்லை.

இதனை தொடர்ந்து சுமார் 50 பேரை கைது செய்த போலீஸார், சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் ஆக்கிரமடைந்த போராட்ட குழுவினர் தாங்கள் அடைக்கப்பட்ட திருமண மண்டபத்தில் கையுடன் கொண்டு வந்திருந்த கருணாநிதி உருவப்படத்திடம் மனு அளித்து முறையிட்டனர்.

இதுகுறித்து பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.எல் இளங்கோ கூறுகையில், “இங்கு திமுக ஆட்சி நடக்கிறது. அந்தக் கட்சியின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்று அமைதியான முறையில் மனு அளிக்க கூட அனுமதி மறுக்கப்படுகிறது. 900-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். இந்த அரசு செவி சாய்க்காத நிலையில் ஏற்கெனவே ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதி நினைவிடத்தில் மனு அளிக்க முடிவு செய்தோம். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை கூட இந்த அரசு காப்பாற்றவில்லை. விவசாயிகள் மீது அக்கறையற்ற அரசாக இந்த திமுக அரசு உள்ளது.” என்றார்.