வற்றாத வசந்தகால நதி ஜெயச்சந்திரன்….
நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…
தொடர்ச்சியாக பாடல்களைக் கேட்டு வந்தாலும் பல ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென இன்ப அதிர்ச்சி..
எங்கேயோ ஒரு இடத்தில் இருந்து “செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே”” என்று ஒரு பாடல் கேட்டது . படத்தின் பெயர், இசையமைப்பாளர் போன்ற விவரங்கள் எல்லாம் தெரியாது. ஆனால் திரும்பத் திரும்ப கேட்க வைத்தது அந்தப்பாடல். செவ்வந்தி என்றொரு படம். இசை இளையராஜா. முன்னாள் அமைச்சர் அரங்க நாயகத்தின் மகன் கதாநாயகனாக நடித்து அந்தப் படத்தின் கதாநாயகியையே திருமணம் செய்து கொண்டார் என்று நண்பர் ஒரு தகவலை சொன்னார். போகட்டும் ஜெயச்சந்திரன் மேட்டருக்கு திரும்புவோம்.
ஜெயச்சந்திரன் பாடல்களை அதற்கு முன்பு கேட்டிருந்தாலும் முதன்முறையாக அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியது எந்த பாடல் என்றால் “சித்திரை செவ்வானம் சிரிக்கக் கண்டேன்” என்கிற ‘காற்றினிலே வரும் கீதம்’ படப் பாடல்தான்.. வந்தவாசியில் டீக்கடைக்காரர் கொடுத்த பாஸை வைத்துக்கொண்டு ரிலீஸில் பார்த்த முத்துராமன் படம். அப்போதெல்லாம் டீக்கடை, முடிதிருத்தும் கடை முன்பு தியேட்டர் காரர்கள் போஸ்டர், தட்டிகள் வைப்பார்கள். அவற்றை வைக்க இடம் தருவதற்காக இரண்டு அல்லது மூன்று பாஸ்களை இலவசமாய் சினிமா பார்க்க கடைக்காரர்களுக்கு தருவார்கள்.. மறுபடியும் வேறு எங்கோ போகிறோம்.
எழுபதுகளில் தொடங்கி ஜெயச்சந்திரன் தமிழில் பல பாடல்களைப் பாடியிருந்தாலும் பழைய-புதிய தலைமுறை களை ஒரே நேர்கோட்டில் நிற்க வைத்து ரசிக்க வைத்த படம், வைதேகி காத்திருந்தாள்.
ராசாத்தி உன்னை காணாத கண்ணும்..
காத்திருந்து காத்திருந்து கண்களும்
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ…
என்று அடுத்தடுத்து விஜயகாந்தின் படத்தில் ஓடிய போது தியேட்டரே ஆனந்த வெள்ளத்தில் மிதந்தது.
பின்னணி பாடகர் ஜெயச்சந்திரனின் குரல் அந்த அளவுக்கு பட்டையை கிளப்பும்.. இந்த படம் மட்டுமல்ல, ஜெயச்சந்திரன் பாடியவற்றில் 95 சதவீதம், மெகா ஹிட்டாகவே அமைந்தன.. ஆனாலும், ஈடுஇணையற்ற வாணி ஜெயராமைப் போலவே, ஜெயச்சந்திரனையும் தமிழ் இசையமைப்பாளர்கள் பெரிய அளவில் பயன்படுத்தவேயில்லை.. 1970களிலும் 1980களிலும் ஜெயச்சந்திரன் தமிழ் சினிமாவில் வலம்வரும்போதெல்லாம் அதகளப் படுத்திவிட்டுத்தான்போவார்..
ஜெயச்சந்திரனை பற்றி நண்பரிடம் ஒருமுறை பேசிக்கிட்டு இருக்கிறப்போ, அலைகள் படம் ஞாபகத்துக்கு வந்துச்சு..
1973-ல் ஸ்ரீதர் எடுத்து பெரிய அளவுல பேசப்படாத படம். உலகம் சுற்றும் வாலிபன்ல நடிச்ச சந்திரகலாதான் ஹீரோயின்.. கன்னடத்தை சேர்ந்த விஷ்ணுவர்த்தன் இந்த படத்துல அறிமுகம்.. நடிகை பாரதியை கட்டிகிட்டவரு.. எப்ப வுமே மூஞ்சை உம்முனு வெச்சிருக்கிற வெறப்பான, ஆனா நேர்மையான போலீஸ் ஆபிசர் ரோல். ஆனால் குரல் பின்னணி நடிகர் விஎஸ் கோபாலகிருஷ்ணன். .. தமிழ்நாடே நல்லா கேட்டு பழகிப்போன அந்த குரலால சின்னப்பையன் விஷ்ணுவர்த்தன் நடிக்கிறாரா இல்ல சீனியர் கோபாலகிருஷ்ணன் நடிக்கறாருன்னு புரியாம அந்த ரோலே தடுமாறும்.
ஆனா இந்தில இதேமாதிரி உம்முனா மூஞ்சி ப்ளஸ் வெறப்பான இன்ஸ்பெக்டர் ரோல்ல அமிதாப் பண்ண சஞ்சீர் படம், அலைகளுக்கு பின்னாடி நாலுமாசத்துல வந்து அமிதாப்பை எங்கோயோ கொண்டுபோயிடிச்சி.
ஸ்ரீதருக்கு என்ன நேரமே, பாரதி யை ஹீரோயினா போட்ட அவளுக்கென்று ஒரு மனமும் ஓடல.. விஷ்ணுவர்த்தனை போட்ட அலைகளும் ஓடலை..
படத்துல ரெண்டு விஷயம், சந்திரகலா ஆக்டிங் சூப்பரா இருக்கும். துள்ளலா, மிடுக்கா, பிரில்லியன்ட் பெண்ணா அசத்தியிருப்பாங்க.. அப்பறம் கேக்க கேக்க திகட்டவே திகட்டாத பி.ஜெயச்சந்தின் பாடிய,
” பொன்னென்ன பூவென்ன கண்ணே”இந்த பாட்டு.. விவித பாரதி ரசிகர்களின் வெறித்தனமான விருந்தா இருந்துச்சு..
அதுக்கப்புறம் ஜெயச்சந்திரனின் திரைப்பயணம் அலாதியானது.
திருமுருகன் அருகினிலே வள்ளிக்குறத்தி…
சித்திரை செவ்வானம் சிரிக்க கண்டேன்…
கண்ணனின் சன்னதியில் எந்தன் கண்மணிக்கென்ன குறை
அமுதோ தமிழில்..
அழகி ஒருத்தி எளநி விக்கறா கொழும்பு வீதியிலே..
என்னோடு என்னென்னவோ ரகசியம்..
மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ
கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்.
தாலாட்டுதே வானம், தள்ளாடுதே மேகம்..
பூவை எடுத்து ஒரு மாலை தொடுத்து
கொடியில மல்லிகைப்பூ மணக்கு மானே..
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்…
.என ஹிட் பட்டியல் போய்க்கொண்டே இருக்கும்..
நாம் இவ்வளவு சொன்னபிறகும், எல்லாவற்றையும்விட முக்கியமா அந்த
கவிதை அரங்கேறு நேரம்.
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ
கத்தாழம் காட்டு வழி
இந்த பாட்டுகளையெல்லாம் விட்டுட்டீங்களேன்னு வருவாங்க..
ஜெயச்சந்திரன் சிறு வயது என்றால்
எட்டு வயதில் சர்ச்சில் பாடல்களை பாடி அசத்திய கேரள சிறுவன். அவரின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய ஒரு அருமையான கட்டம், பாடகர் ஜேசுதாசின் அறிமுகம்..
1958 ஆண்டு ஒரே மேடையில் நடந்த போட்டியில் ஜேசுதாய் கிளாசிக் பாடகர் பரிசையும், ஜெயசந்திரன் மெல்லிசை பாடகர் பரிசையும் வென்றனர்.. அதன்பிறகு நட்பாகி, ஜெயச்சந்திரன், சகோதரன் சுதாகரன் மற்றும் ஜேசுதாஸ் ஆகிய மூவரும் நெருக்கமான நண்பர்களாகி ஊர் சுற்றி சினிமாக்களாக பார்த்து தள்ளினர். அதிலும் கல்யாணபரிசு, கற்பகம் படத்தின் பாடல்கள் ஜெயச்சந்திரனுக்கு சினிமாவில் பாடியே தீரவேண்டும் என்ற வெறியை ஊட்டியவை..
பின்னாளில் வெற்றிகரமான பின்னணி பாடகராய் பல மொழிகளில் ஜொலித்த ஜெயச்சந்திரன், வாழ்வில் ஒரு சுவையான சம்பவம். 1975ல் பெண்படா என்றொரு மளையாளபடம்.. இசையமைப்பாளர் நான்கு பாடல்களுக்கு மூன்றை முடித்துவிடுகிறார். அப்போது அங்கே 9 வயது சிறுவன் ஹார்மோனியத்தில் அழகாக எதையோ வாசிக்கிறான். அங்கிருந்தவர்கள் வியந்துபோய் சிறுவனை முழுமையாக இசைக்கச்சொல்லி முழுப்பாடலுக்கு டியூன் போடவைக்கறார்கள். “வெள்ளித்தேன் கிண்ணம்போல் வெண்ணக்கல் சிற்பம் போல்..” என்ற பாட்டை பாடகரும் பாடி ஒலிப்பதிவு முடிகிறது..
பாட்டு செம ஹிட். பாடியது ஜெயச்சந்திரன். அந்த சிறுவன் இசையமைப்பாளர் ஆர்கே.சேகரின் மகன் தீலிப், அவர்தான் இன்றைக்கு ஆஸ்கார் புகழ் ஏஆர் ரஹ்மான்..
காலம்தான் எவ்வளவு விசித்திரங்களை தூவிக்கொண்டே போகிறது..
வசந்தகால நதிகளிலே
வைரமணி நீரலைகள்..
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரண்டின் நினைவலைகள்..
Our farewell to legend P.JEYACHANDRAN