சென்னை: தமிழக சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தில் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அமைச்சர் சேகர்பாபு மின்னல் வேகத்தில் செயல்படுகிறார் என பாராட்டினார். தொடர்ந்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் கூறினர். பட்டினப்பாக்கம் முதல் மகாபலிபுரம் வரை கடல் மேல் பாலம் அமைப்பது குறித்தும் விவாதம் நடைபெற்றது.

சென்னை: 2025ஆம் ஆண்டுக்கான முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்  ஜனவரி 6ந்தேதி அன்று காலை 9:30 மணிக்கு ஆளுநர் உரையுடன்  தொடங்க இருந்தது.. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் வெளிநடப்பு செய்த நிலையில், சபாநாயகர் ஆளுநர் உரையை வாசித்தார். பின்னர் 2வது நாள் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அவையில் ஆளுநருக்கு எதிரான தீர்மானம் மற்றும் யுடிஜிசியின் புதிய விதிமுறைகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், இன்று 5வது நாள் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய  அமர்வின் கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் கள் பதில் கூறி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் திமுக எம்.எல்.ஏ திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல் மலைக்கோட்டை இடையே விரைவில் ரோப் கார் வசதியை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததுடன், அமைச்சர் அமைச்சர் சேகர்பாபு மின்னல் வேகத்தில் செயல்படுகிறார் என சட்டப்பேரவையில்  பாராட்டினார். இதையடுத்து பதில் தெரிவித்த அமைச்சர், உறுப்பினரின்கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.

புதிய பேருந்துகள் தொடர்பான உறுப்பினரின் கேள்விக்குபதில் கூறிய அமைச்சர் சிவசங்கர், ஏப்ரல் மாதத்தில் 2,232 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் பதில் தெரிவித்துள்ளார். டெண்டர் விடப்பட்டு கூடு கட்டப்பட்டு வரும் 2,232 புதிய பேருந்துகள் ஏப்ரலில் பயன்பாட்டுக்கு வரும். 2232 பேருந்துகளை தவிர்த்து மேலும் 1,614 புதிய பேருந்துகள் வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஜெர்மனி வங்கி நிதி உதவியுடன் 500 மின்சார பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. அரசு போக்குவரத்தில் 3004 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது என தெரிவித்தார்.

துணை சபாநாயகர் பிச்சாண்டி பேசும்போது, , மும்பையில் உள்ள அடல் சேது பாலம் போல தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு பாலம் அமைக்க அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, இலங்கையில் நிலவிய உள்நாட்டு போர் காரணமாக அந்த திட்டம் இன்றுவரை கனவுத் திட்டமாகவே இருக்கிறது எனவும், கடந்த 2015-ம் ஆண்டு இந்தியா வந்த அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை சுரங்கப்பாலம் அமைக்க இந்தியா சார்பில் முன்மொழியப்பட்ட தாகவும், ஆனால் இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.  கடந்த ஆண்டு அதே ரணில் விக்ரமசிங்கே இந்தியா வந்த போதும் சாலை போக்குவரத்து பாலம் அமைக்க மத்திய அரசின் மூலம் முன்மொழியப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய துணை சபாநாயகர் பிச்சாண்டி, ராமாயணத்தில் ராமர் இலங்கை பாலம் கட்டியதாக இருப்பதாகவும், மும்பையில் கடல் மேல் அடல் சேது பாலம் மத்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும், சென்னையில் பட்டினப்பாக்கத்தில் இருந்து மகாபலிபுரம் வரையில் கடல் மேல் பாலம் அமைக்க அரசு முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ. வேலு, முதற்கட்டமாக கலங்கரை விளக்கத்தில் இருந்து நீலாங்கரை வரையில் கடல் மேல் பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருவதாகவும், அதனை மத்திய அரசின் நிதி, மாநில அரசின் நிதி அல்லது தனியார் பங்களிப்புடன் செயல்படுத்துவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

இதையடுத்து பேசிய  பிச்சாண்டி கூறுகையில் பட்டினப்பாக்கம் முதல் மகாபலிபுரம் வரை கடல் மேல் பாலம் அமைத்தால் தான் சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு அமைச்சர் எ.வ. வேலு பதில் அளிக்கையில், பிச்சாண்டி நல்ல ஆலோசனை அளித்துள்ளார். மும்பையில் கட்டப்பட்டுள்ள பாலத்தை நான் பார்த்திருக்கிறேன். அதே போல் சென்னை பகுதிகளில் உள்ள கடலில் பாலம் கட்ட முதற்கட்டமாக கலங்கரை விளக்கம் முதல் நீலாங்கரை வரை 15 கிலோமீட்டர் தூரத்திற்கு கடல் மேல் பாலம் கட்ட திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். முதலமைச்சருடன் கலந்து பேசி இதில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார்.

தோராய பட்டா வைத்துள்ள அனைவருக்கும் இ-பட்டா வழங்கப்படுமா என அரக்கோணம் எம்.எல்.ஏ.ரவி  கேள்வி எழுப்பினார். அதற்கு பதில்அளித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,  வரும் ஆண்டில் அனைவருக்கும் இ-பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இதையடுத்து மற்றொரு உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு, தூய்மை பணியாளர்களின் குடும்பங்களை எல்லாம் தொழில் முனைவோர்களாக மாற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

இவ்வாறு உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

வினாக்கள்-விடைகள் நேரம் முடிந்தவுடன், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார்.