சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரம் தொடர்பாக, திடீர் பேட்டி அளித்த சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
இந்தியாவின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான, புகழ்பெற்ற சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் இரண்டாமாண்டு படித்து வந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை, கோட்டூர் புரத்தைச் சேர்ந்த திமுக ஆதரவாளர் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அந்த நபர் பாலியல் பலாத்காரத்தை தனது செல்போனில் படம் பிடித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே ஞானசேகரன் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யும் போது சார் என்று அழைத்து யாரிடமோ பேசியது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார். எனவே ஞானசேகரன் தவிர மேலும் சிலருக்கு இந்த விவாகரத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கிடையில், மாணவி கொடுத்த புகாரின் எஃப்ஐஆர் வெளியானது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. ‘பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களின் அடையாளங் களை வெளியிடக் கூடாது’ என சட்டம் இருக்கும்போது, மாணவி தொடர்பான விவரங்கள் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. , ‘தமிழக காவல்துறையின் செயல்பாடு பாதிக்கப்பட்ட பெண்ணின் நன்மதிப்பைக் குலைப்பதற்கான முயற்சியாக உள்ளதாக’வும், ‘இது தனி உரிமைக்கு எதிரானது மட்டுமல்ல. சட்டவிரோத செயலும் கூட. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலினே பொறுப்பு’ என தனது எக்ஸ் பக்கத்தில் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதில் அளித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “பாதிக்கப்பட்ட மாணவியை முடக்க வேண்டும் என்று எந்த அடிப்படையிலும் இந்த அரசு செயல்படவில்லை. பாதிக்கப்பட்ட பெண் தாமாக முன்வந்து புகார் கொடுத்தார். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது” எனக் கூறினார்.
இதையடுத்து சென்னை மாநகர காவல்ஆணையர் திடீரென செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார். அப்போது, எஃப்.ஐ.ஆர் கசிந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிடப் பட்டு உள்ளதாக செய்தியாளர்களிடம் கூறிய சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், “தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம்” எனத் தெரிவித்தார்.
டிசம்பர் “24-ம் தேதி மாலை 4 மணிக்கு அழைப்பின் அடிப்படையில் போலீஸ் குழு அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சென்றபோது, பாதிக்கப்பட்ட மாணவியும், POSH கமிட்டியிலுள்ள பேராசிரியையும் அளித்த புகாரின் அடிப்படையில் FIR பதிவு செய்தோம். பின்னர், விசாரித்து ஆதாரங்களைச் சேகரித்து 25-ம் தேதி காலையிலேயே குற்றம்சாட்டப்பட்ட நபரைப் பிடித்தோம். மேலும் விசாரித்து அவர்தான் குற்றவாளி என்று உறுதிப்படுத்தியவுடன் கைதுசெய்து காவலில் வைத்தோம்.
போக்சோ குற்றங்கள், பெண்களுக்கெதிரான குற்றங்களில் FIR பதிவு செய்யும்போது Crime and Criminal Tracking Network & Systems (CCTNS)-ல் தானாகவே லாக் ஆகிவிடும். ஆனால், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக FIR லாக் ஆவதில் தாமதமாகியிருக்கிறது. அந்த தாமதமான நேரத்தில் ஒரு சிலர் பார்த்து, பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள். அவர்கள் வழியாகக் கசிந்திருக்கலாம். அதேபோல், புகார்தாரருக்கு ஒரு நகல் கொடுத்தோம். இந்த இரண்டு வழிகளில் FIR வெளியாகியிருக்கலாம். இதுபோன்ற வழக்குகளில் FIR-ஐ கசியவிடுவது குற்றம்.
இப்போது இந்த விவகாரத்தில் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வெளியிலிருந்துதான் கசிந்திருக்கிறது. கசியவிட்டவர்களுக்குத் தகுந்த தண்டனை அளிக்கப்படும். இதுவரை நடந்த விசாரணையில், ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி. மேலும், செல்போனை ஃப்லைட் மோடில் வைத்து அவர்களை மிரட்டி யிருக்கிறார். 2013 முதல் ஞானசேகரன் மீது சென்னையில் 20 வழக்குகள் இருக்கிறது. இதில், 6 வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. மற்ற வழக்குகள் விசாரணையில் இருக்கிறது. கடைசியாக இவர் மீது 2019-ல் வழக்குப்பதிவாகியிருக்கிறது. அதற்குப் பிறகு இவர் மீது குற்ற வழக்கு பதிவாகவில்லை.
அனைத்தும் திருட்டு போன்ற வழக்குகள். மற்றபடி, ரவுடித்தனம் செய்ததாகவோ, பெண்களைத் துன்புறுத்தியதாகவோ இவர் மீது வழக்கு இல்லை. விசாரணையில் அப்படி ஏதும் தெரிய வந்தால் சம்பந்தப்பட்டவர்களை அணுகி புகார் வாங்குவோம். அண்ணா பல்கலைக்கழகத்தில் 70 சிசிடிவி கேமராக்கள் இருக்கிறது. அதில், 56 சிசிடிவி கேமராக்கள் வேலை செய்கிறது. 140 பாதுகாவலர்கள் இருக்கிறார்கள். இந்த மாணவி தைரியமாகப் புகாரளித்தது போல மற்றவர்கள் தைரியமாகப் புகாரளிக்க வேண்டும். குற்றவாளி எந்தக் காட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை, நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறினார்.
இதையே கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த பொதுநல வழக்கின் வாதத்தில், அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தெரிவித்தார். அவர் வாதிடும்போது, “முதல் தகவல் அறிக்கையைப் பொறுத்தவரையில் பெண்கள், குழந்தைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் தொடர்பான வழக்கு விவரங்களை கணினி தடுத்துவிடும். கோட்டூர்புரம் போலீசார் முதல் தகவல் அறிக்கை தயாரித்த பிறகு அது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு முடக்கப்பட்டது (block). ஆனால், அதன் விவரங்களை சிலர் எடுத்துள்ளனர்” என்றார்.
“எஃப்.ஐ.ஆரை முடக்கிய பின்னரும் எப்படி பார்க்க முடியும்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ”தேசிய தகவல் மையத்திடம் கேட்டபோது, இந்திய தண்டனைச் சட்டத்தில் (IPC) இருந்து பிஎன்எஸ் (BNS) சட்டத்துக்குப் பிரிவுகளை மாற்றியபோது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெளியாகியிருக்கலாம் எனக் கூறினர்” என்று தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கையும், முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்த வழக்கையும் விசாரிக்க மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால இழப்பீடாக 25 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இத்துடன், “விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளபோது, அரசு அனுமதி இன்றி செய்தியாளர் சந்திப்பை நடத்தி, வழக்கு குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்த காவல்துறை ஆணையருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம்” என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், “கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை வசூலிக்காமல் மாணவி படிப்பைத் தொடர்ந்து முடிக்க அனுமதிக்க வேண்டும்” என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, மிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மாணவி தொடர்பான, முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு தமிழ்நாடு காவல்துறை காரணமல்ல. மத்திய அரசின் தேசிய தகவலியல் மையத்தின் (என்ஐசி) நிா்வாகக் குறைபாடுதான் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. இதனால், காவல்துறை ஆணையா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
அதே சமயம் சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்துவது, இழப்பீட்டுத் தொகை வழங்குவது போன்ற உத்தரவுகளுக்கு எதிராக இந்த மேல் முறையீட்டு மனுவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இந்த விவகாரத்தில் அதிமுக, பாஜக வழக்குரைஞா்கள் தரப்பில் ஏற்கெனவே தனித் தனியாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.