சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் வழக்கில், கூறப்பட்டுள்ள யார் அந்த சார் என கேள்வி எழுப்பி அதிமுகவினர் பதாதைகள் மற்றும் முககவசம் அணிந்து போராடிய நிலையில், திமுக எம்எல்ஏக்கள், இன்று அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகரின் படத்தைகாட்டி, ‘இவன்தான் அந்த சார்’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தி சட்டப்பேரவை வளாகத்தில் முழக்கமிட்டனர்.
சென்னையில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 2024ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி பொறியியல் மாணவி ஒருவர் திமுக ஆதரவாளர் ஞானசேகரன் என்ற குற்றவாளியால், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்த வழக்கின் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், சொந்த ஊர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் பதிவான முதல் தகவல் அறிக்கை வெளியாகி பெரும் அதிர்வலைகள் ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவி, ஞானசேகரன், தன்னை வேறு ஒருவருடன் இருக்கும்படி வலியுறுத்தியதாகவும், போனில் சார், சார் என பேசியதாகவும் குற்றம் சாட்டி இருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாநகர காவல்ஆணையர் அருண், திடீரென செய்தியாளர்களை சந்தித்து, வேறு யாரும் இந்த பாலியல் சம்பவத்தில் சம்பந்தப்படவில்லை என கூறியது மேலும் சந்தேகங்களை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரன் சார், சார் என்று ஒருவரிடம் பேசியிருப்பதாகவும் , அந்த சார் யார்? என்பது குறித்து உயர் அதிகாரி தெரிவிக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும், இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார். மேலும் யார் அந்த சார் என பதாதைகளை ஏந்தி அதிமுகவினர் சென்னை எக்ஸ்பிரஸ் மாலில் திடீர் போராட்டம் நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், ‘யார் அந்த சார்?’ என்ற கேள்வியுடன் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதையடுத்து, தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் அதிமுக எம்எல்ஏக்களம் யார் அந்த சார் என பொறிக்கப்பட்ட பேட்ஜ் அணிந்து கலந்துகொள்கின்றனர்.
இதற்கு பேவையில் பதில் கூறிய முதல்வர் ஸ்டாலின் யார் அந்த சார் என்பதற்கு ஆதாரம் இருந்தால் கொடுங்கள், நடவடிக்கை எடுக்கிறேன் என கூறியதுடன், யார் அந்த சார் என அதிமுக ஆட்சியின்போது நடைபெற்ற பாலியல் குற்றச்சம்பவங்களை சுட்டிக்காட்டினார். மேலும், சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிக்கு ஆதரவாக பஞ்சாயத்து செய்த அதிமுக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை சுட்டிக்காட்டி, இவர்தான் யார் என கூறி, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை புகாரை மடைமாற்றி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, இன்று சட்டப்பேரவைக்கு வந்த திமுக எம்எல்ஏக்கள், “இவன்தான் அந்த சார்’ என்ற வாசகம் மற்றும் அதிமுக பிரமுகர் படத்துடன் அடங்கிய பதாகைகளை ஏந்தி திமுக எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.
கடந்த சில நாக்டளாக கருப்பு சட்டையுடன், யார் அந்த சார் பேட்ஜுடன் சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெள்ளை சட்டையில் வந்திருந்தனர். வெள்ளை சட்டையில் யார் அந்த சார்? என்ற வாசகம் அடங்கிய பேட்ஜும் அணிந்திருந்தனர். சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று உரையாற்ற உள்ள நிலையில் வெள்ளை சட்டை அணிந்து வந்துள்ளனர்.
அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறையினர் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்ட விவகாரம் உறுதியான நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பின்னர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சிறப்பு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில், குற்றவாளிக்கு ஆதரவாக அந்த பகுதி பிரமுகர் சுதாகர் என்பவர் பஞ்சாயத்து பேசிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு உள்ளார். இதையடுத்து, அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அந்த திமுக பிரமுகர் சுதாகர் படத்துடன் திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.