மதுரை: பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரையில் நடைபெறும் உலகப்புகழ்பெற்ற அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 5347 மாடு பிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். அதுபோல, இந்த போட்டிகளில் தங்களது காளைகளை இறக்க, 12632 காளைகளையும் அதன் உரிமையாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
நடப்பாண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, ஜ்ல்லிக்கட்டு போட்டி ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கி உள்ள உலக புகழ்பெற்ற போட்டிகள் நடைபெறும் மதுரை மாவட்டத்தில் நடைபெறும் போட்டிகள் குறித்த தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஜன. 14ல் அவனியாபுரத்திலும், ஜனவரி 15ல் பாலமேட்டிலும், ஜனவரி 16ல் அலங்காநல்லூரிலும் போட்டிகள் நடைபெற உள்ளது.
இதையடுத்து, மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான மாடுபிடி வீரர் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் டோக்கள் முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த பதிவு நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு தொடங்கிய முன்பதிவு, நேற்று மாலை 5 மணி வரை நடைபெற்றது. அதன்படி இந்த போட்டிகளில் களமிறங்க 12 ஆயிரத்து 632 ஜல்லிக்கட்டு காளைகள் தயாராக உள்ளது. அதை அடக்கி நாங்களும் காளைகள்தான் நிரூபிக்க 5 ஆயிரத்து 347 மாடு பிடி வீரர்களும், முன்பதிவு செய்துள்ளனர்
மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான இளைஞர்கள், காளை உரிமையாளர்கள் ஆர்வமுடன் பதிவு செய்தனர். காளையின் மருத்துவச் சான்றிதழ், காளையின் படம், உரிமையாளர் மற்றும் உதவியாளருடன் புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் ஜல்லிக்கட்டு காளையை துன்புறுத்தாமல் விதிகளுக்கு உட்பட்டு போட்டியில் கலந்துகொள்வோம் என்ற உறுதிமொழியிலும் ஒப்பதல் அளித்த பின்னரே முன்பதிவு செய்யப்பட்டது.
இதேபோன்று மாடு பிடி வீரர்களுக்கான முன்பதிவில் மாடுபிடி வீரரின் கைபேசி எண் , ஆதார் எண், பெயர், வயது, முகவரி, உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்த பின்னர் முன்பதிவு செய்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளையுடன் உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.