டெல்லி: டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு இடம் மாற்றப்பட்டு வருகிறது. இந்திராகாந்தி பவன் என பெயரிடப்பட்டுள்ள இந்த கட்டித்தின் திறப்பு விழா வரும் 15ந்தேதி (ஜனவரி) கோலாகலமாக நடைபெற உள்ளது.
கடந்த 45 ஆண்டுகளாக டெல்லி அக்பர் சாலையில் செயல்பட்டு வந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் டெல்லி கோட்லா சாலைக்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த இடத்தில் கடந்த சில ஆண்டுகளாக கட்டப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் ஜனவரி 15ந்தேதி திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திரா காந்தி பவன் என்ற பெயரில் அமைந்துள்ள இந்திய புதிய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகத்தை கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில்,.சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, தற்போதைய தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
புதிய கட்டிடம், கட்சியின் நவீன தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இந்த கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொள்ள கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் மூத்த தலைவர்கள், பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், நாடெங்கிலும் உள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் என பலர் கலந்துகொள்ள உள்ளனர்.
இது புதிய முயற்சிக்கும், புதிய முன்னேற்றத்திற்கான தருணம் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கோட்லா சாலையில் அமைந்துள்ள இந்திரா பவன் எனும் இந்த கட்டிடம் கட்சி உறுப்பினர்களின் தேவையை கருத்தில் கொண்டு பல நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளதாகவும் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.