பேட்டைராய சுவாமி திருக்கோயில், தேன்கனிக்கோட்டை, தர்மபுரி மாவட்டம்

கோயில் அமைந்துள்ள இடத்திற்கு அந்த காலத்தில் அத்திரி வனம் என்று பெயர். அந்த காட்டில் கண்வர் (சகுந்தலையின் வளர்ப்புத் தந்தை) தவம் செய்ய வந்தார். தவம் செய்து கொண்டிருக்கும் போது தேவகண்டகவன் என்ற யக்ஷன் சாபம் ஏற்பட்டு புலித் தலை, மனித உடம்போடு அலைந்த கொண்டிருந்ததால் கண்வர் ரிஷியின் தவத்திற்கு இடையூறு ஏற்பட்டது. அதனால் துன்பம் ஏற்பட்ட கண்வ ரிஷி திருவேங்கட மலையானை நினைத்து வழிபட்டு தன்னை காக்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டான். திருவேங்கடமலையானும் இவன் புலித் தலையோடு இருந்ததால் வேட்டைக்கார ரூபத்தில் வந்து போரிட்டு டெங்கினி என்ற கதையால்(ஆயுதத்தால்) அவரை அடித்து சம்காரம் செய்து, முனிவரின் தவத்தை காப்பாற்றினார். முனிவரின் பிரார்த்தனையின் பேரில் பேட்டைராய சுவாமி என்ற பெயரில் பூதேவி ஸ்ரீதேவியோடு இங்கு எழுந்தருளியதாக வரலாறு கூறுகிறது.

விஷ்ணு கார்த்திகை அன்று சுவாமி புது வஸ்திரத்தை நெய்யால் துவைத்து தீபாராதனை காட்டி, கோபுரத்தின் உச்சியிலிருந்து கம்பால் தொங்க வைத்து கற்பூரத்தால் கொளுத்துவார்கள். இவ்வாறு செய்வதால் தீமைகள் அழிக்கப்படுகின்றன என்பது ஐதீகம். எல்லா ஜீயர்களும் ஆச்சார்யார்களும் மங்களாசாசனம் செய்த தலம். வானமாமலை தற்போது முன்பிருக்கும் பட்டம், திருமலை பெரிய ஜீயர், திருப்பெரும்புதூர் எம்பார் ஜீயர், வரத எத்திராஜ ஜீயர், காஞ்சி அழகிய மணவாள ஜீயர், தற்போது இருக்கும் ஆண்டவன் சுவாமி மேல்கோட்டை (கர்நாடகா) எதிகிரி எத்திராய ஜீயர் இவர்களால் மங்களாசாசனம் செய்யப் பட்டது. பழமை வாய்ந்த கோயில் இது. திருப்பதியில் உள்ளபடியே நின்று சேவை சாதிக்கும் மூல மூர்த்தியின் திருக்கோலம் மிக அழகாக உள்ளது.

மூலவர் பூ தேவி, ஸ்ரீதேவியோடு ஒருசேர மூலஸ்தானத்தில் இருப்பது விசேசம். இருமருங்கிலும் உள்ள பிராட்டிமார்கள் முகபாவங்களும் வேறுபட்டது. ஸ்ரீதேவியினுடைய முகபாவம் கூம்பிய தாமரை போலவும், பூதேவியுனுடைய முகபாவம் அலர்ந்த தாமரைப் போலவும் உள்ளது. நின்றிருக்கும் மூலவரை வைகுண்ட ஏகாதசியன்று பரமபத நாதனைப்போல் உட்கார்ந்த திருக்கோலத்தில் அலங்கரித்து பூஜை செய்கிறார்கள். தாயார் வீரலட்சுமி உட்கார்ந்திருக்கிறார். ஆடிப்பூரம் அன்று அமர்ந்திருக்கும் மூலவர் தாயாருக்கு நின்ற கோலத்தில் மடிசார் புடவை கட்டி ஆண்டாள் திருக்கோலம் சாத்தப்படுகிறது. இக்கோயிலின் தேர் 30 அடி உடையதே. ஆனால் அதன்மேல் 4 பக்கமும் 4 வாசல் வைத்து இருக்கிறது. மூலவர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

கஜினி முகமது படையெடுப்பின்போது கோயிலில் இருந்த மூலமூர்த்தியை கட்திரைக்குள் மறைத்து வைத்து, உற்சவமூர்த்தியை முதுகினில் ஏற்றிக்கொண்டு காட்டில் மறைந்திருந்து பிறகு இந்து அரசர் காலத்தில் திரும்பி உற்சவமூர்த்தியை பிரதிஷ்டை செய்த புகழ் வேங்கடபதி தாசர் என்பவரைச்சாரும். இவ்வழிவந்தவர்களே கிராமதிகாரிகளாக இருந்து வருகின்றனர். திருப்பதி கோயிலைப் போன்று இக்கோயிலில் ஆனந்த விமானம் அமைந்துள்ளது.

திருவிழா:

பங்குனி – சித்திரை கல்யாண உற்சவம் – தெலுங்கு உகாதியிலிருந்து ஆரம்பித்து 15 நாட்கள் மிக விமரிசையாக கல்யாண உற்சவம் நடக்கும். பிரம்மோற்சவம் – 9 நாட்கள் திருவிழா – தீர்த்தவாரி, பூர்ணாகுதியோடு முடியும். காலை மாலை வாகனங்களில் சுவாமி புறப்பாடு இருக்கும். – இராம பாணம் விசேஷம், பூப்பல்லக்கு வாண வேடிக்கை ஆகியவை மிக சிறப்பாக நடக்கும். மார்கழி மாதம் – காலை உச்சிகால பூஜை – பகல் பத்து இராப்பத்து உற்சவம் திருவாடிபூரம் உற்சவம் – சயன உற்சவம் – 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசி – திருவரங்க பெருமாள் கோயிலில் நடக்கும் பூஜைகளைப் போலவே இங்கும் பூஜைகள் நடக்கும். புரட்டாசி சனிக்கிழமைகள் இத்தலத்தில் மிகவும் விசேஷமானவை.

கோரிக்கைகள்:

இங்குள்ள பெருமாளை வழிபடுவோர்க்கு உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது.

குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் வழிபட வருகிறார்கள்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தேரடி பிரசாதம் (சர்க்கரை பொங்கல்) பெற்று சாப்பிட்டால் தீர்வு கிடைக்கிறது.

தாயாரை 18 நாட்கள் பூஜித்து சுலோகம் சொன்னால் கல்யாண வரம் கை கூடப் பெறலாம்.

நேர்த்திக்கடன்:

பூணூல் உற்சவம் கல்யாண உற்சவம் நடத்துகிறார்கள். தவிர மொட்டை அடித்தல், சுவாமி புறப்பாடு செய்தல், தோமாலை செலுத்தல், வஸ்த்திரம் சாத்துதல் ஆகியவற்றையும் பக்தர்கள் நேர்த்திகடன்களாக செய்கிறார்கள். நெய், பால், மஞ்சள், இளநீர், சர்க்கரை, பஞ்சாமிர்தம் ஆகியவற்றை அபிஷேகம் நடத்துகிறார்கள். கார்த்திகை தீபத்தன்று நெய்விளக்கு போடுகிறார்கள்