சென்னை: குமரிமுனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா   நடைபெற உள்ளது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்த விழா குறித்த முழு விவரம் வெளியாகி உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கடல் சூழம் குமரிமுனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா மூன்று நாள்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின்போது, விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் சென்று வரும் வகையில்,  ரூ.37 கோடியில் அமைக்கப்பட்ட  கண்ணாடி இழை பாலம் திறந்து வைக்கப்பட உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியால்,   குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளதைத் தொடர்ந்து 30.12.2024 முதல் 1.1.2025 வரை மூன்று நாள்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் வெள்ளி விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள்,  தமிழ் ஆர்வலர்கள்   கலந்துகொள்ள உள்ளனர். இதன் காரணமாக முக்கடல்கள் கூடும் குமரிமுனை  விழாக்கோலம் பூண்டுள்ளது. கடற்கரை பகுதிகள் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

குமரிமுனையில் உள்ள கடலில், விவேகானந்தர் மண்டபத்தில் அருகே இருந்த பாறையில்,  திருவள்ளுவர் சிலை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால்,  25 ஆண்டு களுக்கு முன்பு  புத்தாயிரம் ஆண்டின் முதல் நாள் 1.1.2000 அன்று குமரிமுனையில் திறந்து வைக்கப்பட்ட மாபெரும் விழா உலகமே பாராட்ட நிறுவப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், – ஈழம், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஜப்பான் முதலான பல வெளிநாடுகளிலிருந்து அறிஞர் பெருமக்களும், அய்யன் திருவள்ளுவர்பால் பற்றும், பாசமும் கொண்டுள்ள சான்றோர்களும், இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலிருந்து பேரறிஞர்களும், பொதுமக்களும் திரளாக வருகைதந்து விழாவைப் பெருமைப்படுத்தி வெற்றி தேடித் தந்தனர்.

அய்யன் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்ட மாபெரும் வரலாற்றுப் பொன்னாள் குறித்து முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நெஞ்சுக்கு நீதியில் விரிவாக எழுதியுள்ளார். அதில், சிலை திறப்பு விழா குறித்து சிலாகித்து எழுதியுள்ளார்.  அந்தச் சிலை திறப்பதற்கான பொத்தானை அழுத்தியபோது, என் விரல் என்னை அறியாமல் அசைவற்றுப் போனது. மட்டுமல்ல – என்னையே நான் மறந்துவிட்டேன். நாதசுர இசைவாணர்களும், தவில் வித்வான்களும், அவர்தம் பக்க வாத்தியக்காரர்களுமாக சுமார் முன்னூறுக்கு மேற்பட்டோர்; அய்யனின் சிலை திறக்கப்பட்டபோது இசை முழக்கம் திக்கெட்டும் எட்டிடச் செய்தார்களாம்! மறுநாள் காலையில் மற்றவர்கள் சொல்லக் கேட்டுத்தான் 133 நாயன இசை ஒலித்த செய்தியே எனக்குத் தெரியும்! அந்த அளவுக்கு மெய் மறந்து போயிருந்திருக்கிறேன்! சுமார் முக்கால் மணி நேரம் பேசியிருக்கிறேன்! என கூறியிருந்தார்.

முன்னதாக,  1975ஆம் ஆண்டு (31.12.1975) நான் முதல்வராக இருந்த காலகட்டத்தில், அமைச்சரவைக் கூட்டத்தில் குமரி முனையில் வள்ளுவர் சிலை அமைத்திட முடிவு எடுத்து. 1975 டிசம்பர் 31ல் அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. இளமைப் பருவம் முதல் எந்தவொரு தத்துவ வித்தகனை இமைப் பொழுதும் மறவாமல் – எழுத்தில், பேச்சில், இயக்கத்தில் நினைவு படுத்திக் கொண்டே இருந்தேனோ – யாருக்கு வரலாறு போற்றும் வள்ளுவர் கோட்டம் அமைத்தேனோ – யாருக்காக ஆண்டுதோறும் பொங்கல் திருநாளுக்கு மறுநாள் வள்ளுவர் திருநாள் என அறிவித்தேனோ – பேருந்துகளிலும், பயணியர் விடுதிகளிலும், ஒழுக்கம் போதிக்கும் குறளை எந்த ஒளிமிகு ஏந்தலுக்காக எழுதச் செய்து உருவப்படத்துடன் அமைத்தேனோ – யாருடைய குறளுக்கு குறளோவியம் தீட்டி; பின்னர் 1.330 குறளுக்கும் உரையும் எழுதினேனோ – அந்த அய்யன் திருவள்ளுவருக்கு 25 ஆண்டு காலப் பெரு மூச்சுக்குப் பிறகு சிலை அமைந்தது.

அதைத் திறந்து வைக்க எனக்கு ஆயுளும் இருந்தது என்கிறபோது என் மன நிலையை வர்ணித்திட தமிழ்த்தாய் தன்னிடமும் சொற்களுக்குப் பஞ்சமென்று சொல்லிவிட்டாளே, நான் என்ன செய்ய!” என்று பெருமித உணர்வு மிளிர எழுதியுள்ளார் முத்தமிழறிஞர் கலைஞர்.

அந்த மாபெரும் வரலாற்றுப் பொன்னேடு மலர்ந்த புனித நன்னாள் 25 ஆண்டுகளுக்குப்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் இன்று மீண்டும் எழுச்சிக் கோலம் கொண்டு வெள்ளி விழா என்னும் முத்திரையோடு கன்னியாகுமரி மட்டும் அல்ல, தமிழ்நாடு முழுவதுமே விழாவின் வீச்சினை பரப்பி நிற்கிறது.

இன்று தமிழ்நாட்டு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுப் பல்வேறு முத்திரைச் சாதனைகளை நிகழ்த்தி இந்திய நாடு முழுவதிலும் மட்டும் அல்ல; உலகின் பல்வேறு நாடுகளிலும் புகழ்க் கதிர் வீசிவரும் உதயசூரியன் – திராவிடநாயகர் அவர்கள் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவைக் கொண்டாடுகிறார்கள்.

அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட வெள்ளிவிழா ஆண்டு நிறைவையொட்டி சில வெள்ளி விழாப் பணிகள் திராவிட மாடல் அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் என 12.12.2024 அன்று அறிவித்திருந்தார். இந்த வெள்ளிவிழாப் பணிகளை நிறைவேற்றுவதற்காக, மொத்தம் 10 கோடியே 89 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளதைத் தொடர்ந்து 30.12.2024 முதல் 1.1.2025 வரை மூன்று நாள்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் வெள்ளி விழா நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்துகிறார். இதன் காரணமாக முக்கடல்கள் கூடும் குமரிமுனை இன்று விழாக்கோலம் கண்டு குதூகலம் அடைகிறது.

  • பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரைப் போட்டிகள், கல்லூரி மாணவர்களிடையே சோஷியல் மீடியாவில் ஷார்ட்ஸ் – ரீல்ஸ் – ஏ.ஐ மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் வாயிலாக திருக்குறளின் சிறப்பை உணர்த்தும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
  • அய்யன் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டிருக்கின்ற இடங்கள் வரைபடத்தில் குறிக்கப்பட்டு, எல்லோரும் தெரிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
  • அய்யன் திருவள்ளுவரின் திருவுருவச்சிலை அருகே சீரொளிக் காட்சி (3D Laser) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • வெளிநாட்டில் இருக்கின்ற தமிழ் இணையக் கழக மையங்கள், தமிழ்ச் சங்கங்கள், பிற மாநிலங்களில் இருக்கும் தமிழ்ச் சங்கங்கள், புது டெல்லியில் இருக்கும் தமிழ்நாடு இல்லம் ஆகியவற்றில் யூடியூப் மூலம் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றது.
  • வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு தமிழ் இணையக் கழக மையங்கள் மூலமாகத் திருக்குறளின் பெருமைகள் குறித்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.
  • தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட நூலகங்களிலும், இன்றைய விழா நாளில் திருவள்ளுவர் புகைப்படம் வைக்கப்பட்டு திருக்குறளின் பெருமைகளை உணர்த்துகின்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுத் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது.
  • திருக்குறள் விளக்க உரைகள் மற்றும் திருக்குறள் தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
  • டிசம்பர் 25 முதல் 30 வரை மாவட்ட அளவில் திருக்குறள் தொடர்பான கருத்தரங்கம், பேச்சரங்கம் முதலியவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

இப்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவிய 25ஆம் ஆண்டு நிறைவு வெள்ளிவிழாவை மூன்று நாள் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகக் கொண்டாடுகிறார்.

முதல் நாள் நிகழ்ச்சிகள் 30.12.2024, திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குகிறது. அத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தீவிர முயற்சிகளின் பயனாக 37 கோடி ரூபாய் செலவில் அய்யன் திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கண்ணாடி இழை பாலம் கட்டப்பட்டு அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

அத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருக்குறள் நெறிபரப்பும் 25 தகைமையாளர்களுக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கிறார்.

மாலை 7 மணிக்கு கலைமாமணி சொல்வேந்தர் திரு.சுகி.சிவம் அவர்கள் தலைமையில் “திருக்குறளால் அதிக நன்மை தனிமனிதருக்கே – சமுதாயத்திற்கே எனும் தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெறுகிறது.

பட்டிமன்றத்தில் தனிமனிதருக்கே எனும் கருத்தை வலியுறுத்தி திரு.தா.இராஜாராம், திரு.சே.மோகனசுந்தரம், திரு.மதுக்கூர் இராமலிங்கம் ஆகியோர் வாதிடுகிறார்கள்.

சமுதாயத்திற்கே எனும் கருத்தை வலியுறுத்தி புலவர் இரெ.சண்முகவடிவேல், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, திரு.ராஜா ஆகியோர் வாதிடுகிறார்கள். சொல்வேந்தர் திரு.சுகி.சிவம் அவர்கள் தீர்ப்பு வழங்கி உரையாற்றுகிறார்கள்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் 31.12.2024 செவ்வாய்க்கிழமை

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார்கள். தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும் முன்னிலையேற்று உரையாற்றுகிறார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அய்யன் திருவள்ளுவர் தோரணவாயிலுக்கு அடிக்கல் நாட்டி; திருவுருவச் சிலை வெள்ளிவிழாச் சிறப்பு மலரை வெளியிட்டு; திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவியர்க்குப் பரிசுகள் வழங்கி விழாப் பேருரை நிகழ்த்துகிறார்கள்.

அதனைத் தொடர்ந்து, பியானோ இசைக் கலைஞர் செல்வன் லிடியன் நாதஸ்வரம் அவர்களின் திருக்குறள் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.அழகுமீனா, இ.ஆ.வ., அவர்களின் நன்றியுரையாற்றுகிறார்கள்.

தொடர்ந்து காலை 11.30 மணிக்கு மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் தலைமையில் கருத்தரங்கம் தொடங்குகிறது.

பேராசிரியர் திரு.அ.கருணானந்தன் அவர்கள் சமகாலத்தில் வள்ளுவர் தலைப்பிலும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி திரு ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் திருக்குறளும் சங்க இலக்கியமும் எனும் தலைப்பிலும், புலவர் செந்தலை ந. கவுதமன் அவர்கள் வள்ளுவம் போற்றும் சமய நல்லிணக்கம் எனும் தலைப்பிலும், வழக்கறிஞர் அருள்மொழி திருக்குறள் போற்றும் மகளிர் மாண்பு எனும் தலைப்பிலும், திரு.கரு.பழனியப்பன் அவர்கள் வள்ளுவம் காட்டும் அறம் எனும் தலைப்பிலும் , பேராசிரியர் விஜயசுந்தரி திருக்குறளில் இசை நுணுக்கம் எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தி அய்யன் திருவள்ளுவரின் பெருமைகளை அகிலத்திற்கு எடுத்துரைப்பர்.

தொடர்ந்து மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை பல்வேறு கலைஞர்கள் பங்குபெறும் அரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். 1.1.2025 புதன்கிழமை நிறைவு நாள் நிகழ்ச்சிகள் காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குகிறது.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் திரு.வே. ராஜாராமன் இ.ஆ.ப., அவர்கள் வரவேற்புரை நிகழ்த்துகிறார்கள். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் திருக்குறள் ஓவியக் கண்காட்சியைத் திறந்துவைத்து நினைவுப் பரிசுகள் வழங்குகிறார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.அழகுமீனா,இ.ஆ.ப.,அவர்கள் நன்றியுரை ஆற்றிட நாட்டுப்பண்ணுடன் விழா அய்யன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா நிறைவுபெறுகிறது.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1975-ஆம் ஆண்டில் டிசம்பர் திங்கள் 31.ஆம் நாள் சென்னை கோட்டையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் குமரிமுனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

25 ஆண்டுகளுக்குப் பின் 1.1.2000 அன்று அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு அடுத்த 25 ஆண்டுகளுக்குப் பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அய்யன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழாவை ஊரும் உலகமும் போற்றக் கொண்டாடி தமிழ் நெஞ்சங்கள் அனைத்தையும் உவகையில் துள்ளச் செய்துள்ளார்.