திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்பட திருச்சியில் உள்ள 5 கோயில்களுக்கு காணிக்கையாக வரப்பெற்ற 541 கிலோ 781 கிராம் எடையுள்ள தங்கம் உருக்கி வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கோவில்களுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் நகைகளை உருக்கி, அதை வங்கிகளில் முதலீடு செய்து, அதில் கிடைக்கும் வட்டியை செலவு செய்து வருகிறது தமிழ்நாடு அரசு. இதற்கு பக்தர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு இருந்தாலும், அதை கண்டுகொள்ளாமல், கோவில் நகைகளை உருக்கி அதை வங்கியில் முதலீடு செய்து, அதன்மூலம் கிடைக்கும் பணத்தை பல்வேறு நலத்திட்டங்களுக்கு அரசு செலவிட்டு வருகிறது.
இந்த நிலையில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் கோயில் உள்பட 5 கோயில்களுக்கு சொந்தமான நகைகளை உருக்கி அதன்மூலம் கிடைத்த தக்கத்தை வங்கியில் முதலீடு செய்வதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திருக்கோயிலில் இன்று (27.12.2024), ஓய்வு பெற்ற மாண்பமை உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் திரு.துரைசாமி ராஜு, திரு.க.ரவிச்சந்திர பாபு மற்றும் செல்வி ஆர்.மாலா ஆகியோர் முன்னிலையில் சமயபுரம் உள்ளிட்ட 5 திருக்கோயில்களுக்கு காணிக்கையாக வரப்பெற்ற 541 கிலோ 781 கிராம் எடையுள்ள பலமாற்று பொன் இனங்களை மும்பையிலுள்ள ஒன்றிய அரசின் தங்க உருக்காலையில் உருக்கிடவும், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் இருப்பில் இருந்த 30 கிலோ 596 கிராம் சுத்த தங்கக் கட்டிகளை வங்கியில் முதலீடு செய்திடும் வகையிலும் பாரத ஸ்டேட் வங்கியில் துணை பொது மேலாளர் திரு.அதுல் பிரியதர்ஷினி அவர்களிடம் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்களுடன் இணைந்து ஒப்படைத்தோம். தொடர்ந்து, அன்னாதானம் திட்டத்தை பார்வையிட்டோம்.