சேலம்: மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடி நெருங்கி வருகிறது. தற்போது  மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 2,886 கனஅடியாக உயர்ந்துள்ள நிலையில், ஓரிரு நாளில் அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், குறிப்பாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும்  தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக,  கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பி உள்ளது. மேலும், தமிழ்நாட்டிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கி  பரவலாகமழை பெய்து வருவதால்,  அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.   கடந்த ஒரு மாதமாக  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால்,  அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென  உயர்ந்து வருகிறது.

இதனால் கடந்த வாரம் அணையின் நீர் மட்டம் 118அடியை தாண்டியது. அதனால், அணை ஓரிரு நாளில் நிரம்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென நீர் வரத்து குறைந்ததால், அணை நிரம்பவதில் தாமதம் எற்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை  மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 2,331 கனஅடியில் இருந்து 2,886 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக,  மேட்டூர் நீர்மட்டம் 119.53 அடியில் இருந்து 119.63 அடியாக உயர்ந்துள்ளது.  தற்போது அணையின் நீர் இருப்பு – 92.88 டிஎம்சி-யாக உள்ளது. மேட்டூரில் பாசன தேவைக்காக திறக்கப்பட்ட நீரின் அளவு 500 கனஅடியாக வெளியேற்றப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக விநாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.

இந்த நிலையில், அணைக்கு தண்ணீர் வரத்து இதே நிலை நீடித்தால் ஓரிரு நாளில் அணை  மூன்றவது முறையாக நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.